பாஜக கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை உத்தரவு!

கல்யாணராமன்
கல்யாணராமன்

மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட வழக்கில், பாஜக-வை சேர்ந்த கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டதாக, பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது சென்னை சிட்லப்பாக்கம் காவல் நிலையம் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2017 மற்றும் 2018ல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதே போன்று 2021ஆம் ஆண்டு ஜனவரியில் கோவை மேட்டுப்பாளையத்திலும் வழக்கு பதிவானதில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து குண்டர் சட்டத்திலும் கைதானார். பின்னர், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பிற மத உணர்வுகளை புண்படுத்தும்  வகையில் கருத்து பதிவிட மாட்டேன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், உயர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தை மீறி, இரு மதத்தினர் இடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில், தொடர்ந்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவிலும், பொதுச் செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகார்களின் அடிப்படையில்  கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கிரிஜா ராணி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் காவல்துறை தரப்பில், கல்யாணராமன் ட்விட்டர் பக்கத்தில் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களை புண்படுத்தும் வகையிலும், மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் 18 பதிவுகளை பதிவிட்டதாக வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். ஆனால் 2021 அக்டோபர் 17ஆம் தேதி முதல் 2022 மார்ச் 22ஆம் தேதி வரையில் சிறையில் அடைக்கப்பட்ட நாட்கள், தண்டனை காலத்தை விட கூடுதலாக இருப்பதால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in