‘காஷ்மீர் பண்டிட்களுக்கு அநீதி இழைத்ததே பாஜகதான்’- அர்விந்த் கேஜ்ரிவால் அதிரடி

‘காஷ்மீர் பண்டிட்களுக்கு அநீதி இழைத்ததே பாஜகதான்’- அர்விந்த் கேஜ்ரிவால் அதிரடி

டெல்லியைத் தாண்டி பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்த உற்சாகத்தில், குஜராத், இமாசல பிரதேசம் எனப் பிற மாநிலத் தேர்தல்களிலும், தேசிய அரசியலிலும் தீவிர கவனம் செலுத்துகிறது ஆம் ஆத்மி கட்சி. இந்நிலையில், என்டிடிவி ஊடகத்துக்கு அளித்திருக்கும் சிறப்புப் பேட்டியில், பஞ்சாப் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தல், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து அதிரடியாகப் பல கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால்.

பஞ்சாப் தேர்தல் வெற்றி குறித்து பேசிய கேஜ்ரிவால், “பஞ்சாபில் கிடைத்தது, எங்கள் எதிர்பார்ப்புகளையெல்லாம் கடந்து கிடைத்த பெரும் வெற்றி. பஞ்சாபில் எங்கள் வெற்றிக்கு இரண்டு காரணிகள் வழிவகுத்தன. முதலாவதாக, அங்குள்ள அரசியல் கட்சிகள் மீது மக்கள் அதிருப்தியில் இருந்தனர். எங்கள் டெல்லி மாடலால் மக்கள் ஈர்க்கப்பட்டது இரண்டாவது காரணம்” என்று கூறியிருக்கிறார். “நாங்கள் நேர்மையானவர்கள், ஊழலைச் சகித்துக்கொள்ளாதவர்கள். தேசப்பற்றாளர்களும்கூட. ஆம் ஆத்மி கட்சி இனி அரசியல் கட்சி அல்ல. அது ஒரு சிந்தனைப் போக்கு” என்றும் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியினர் சாமானியர்களுக்காக உழைப்பவர்கள், நல்லாட்சி தருபவர்கள் என்பதாலேயே டெல்லி, பஞ்சாப் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கும் அவர், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்வார் என்றும் விரைவில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டின் இறுதியில் குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அம்மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி களம் காணவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்துப் பேசியிருக்கும் கேஜ்ரிவால், “அம்மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல் குறித்து முன்கூட்டியே எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. எனினும், இரண்டு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கும் என்றே தெரிகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

அடக்கமாகப் பேசினாலும் ஏற்கெனவே இமாசல பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை அவர் தொடங்கிவிட்டார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் இணைந்து இமாசல பிரதேசத்தின் மண்டி நகரில் பேரணியில் கலந்துகொண்டார் கேஜ்ரிவால்.

2014 மக்களவைத் தேர்தலில், மோடி போட்டியிட்ட வாரணசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர் கேஜ்ரிவால். “2024 தேர்தலிலும் மோடியை எதிர்த்துக் களம் காண்பீர்களா?” என்ற கேள்விக்கு, “அது வேறு மாதிரியான காலகட்டம். 2024-ல் மோடியை எதிர்கொள்வது குறித்து பரிசீலிப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.

பண்டிட்களுக்கு அநீதி இழைத்தது யார்?

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தொடர்பான கேள்விக்குக் காட்டமாகப் பதிலளித்திருக்கும் கேஜ்ரிவால், பாஜகவையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

1991-ல் நிகழ்ந்த காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றத்தை அடிப்படையாக வைத்து விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு, பாஜக ஆளும் மாநிலங்கள் வரிவிலக்கு அறிவித்திருந்த நிலையில், டெல்லியிலும் அப்படத்துக்கு வரிவிலக்கு விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ-க்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, “இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், யூடியூபில் பதிவேற்ற வேண்டியதுதானே? எல்லோரும் இலவசமாகவே பார்த்துவிடுவார்கள். ஏன் வரிவிலக்கு கேட்கிறீர்கள்? விவேக் அக்னிகோத்ரியிடம் சொல்லுங்கள், யூடியூப்பில் பதிவேற்றுவார். ஒரே நாளில் எல்லோரும் பார்த்துவிடுவார்கள்” என்று கேஜ்ரிவால் கூறியிருந்தார். இதையடுத்து, டெல்லியில் அவர் வீட்டின் முன்னே பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

இந்தச் சூழலில், என்டிடிவி பேட்டியில், அப்படம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த கேஜ்ரிவால், “பல மாதங்களாக நான் படங்களைப் பார்க்கவே இல்லை. பஞ்சாப் தேர்தலில் கவனம் செலுத்தியதால் அதற்கு நேரமும் கிடைக்கவில்லை” என்றார்.

அப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஒரு திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து ஏன் இவ்வளவு கவலை? காஷ்மீர் பண்டிட்கள் குறித்து பாஜகவினருக்குக் கவலை இல்லை. காஷ்மீர் பண்டிட்களுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு பாஜகதான் பொறுப்பு. காஷ்மீரில் பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டபோது மத்தியில் ஆட்சியில் இருந்தது யார்? பாஜக ஆதரவு பெற்ற அரசுதானே? அப்போது காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் அமலில் இருந்தது. அப்போது அங்கு ஆளுநராக இருந்த ஜக்மோகன் யார்? பாஜகவைச் சேர்ந்தவர். ஆக, மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவின் ஆட்சிதான் அப்போது நடந்துகொண்டிருந்தது. இவர்களே காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக அநீதி இழைத்தார்கள். இதெல்லாம் நடந்து 32 ஆண்டுகள் ஆகிவிவிட்டன. 15 ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தது. இப்போதுகூட காஷ்மீரில் பாஜக ஆளுநர்தான் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கிறார். இந்த 15 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு காஷ்மீர் பண்டிட் குடும்பத்தை இவர்கள் காஷ்மீரில் மீள்குடியேற்றம் செய்திருக்கிறார்களா? இவர்களுக்கும் காஷ்மீர் பண்டிட்களுக்கும் என்ன தொடர்பு? 32 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்து சொல்கிறார்கள், ‘காஷ்மீர் பண்டிட்கள் பற்றி படம் எடுத்திருக்கிறோம். அதைப் போய்ப் பாருங்கள்’ என்று நம்மிடம் கூறுகிறார்கள். அதைவைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். இது தீக்காயத்தின் மீது உப்பு தடவும் வேலை இல்லையா?” என்று கடுமையாகச் சாடினார் கேஜ்ரிவால்.

மேலும், “பாஜகவினரின் இடத்தில் நாங்கள் இருந்திருந்தால், காஷ்மீர் பண்டிட்கள் பற்றி படம் எடுத்திருக்க மாட்டோம். அவர்களின் கரம் பிடித்து அழைத்துச் சென்று மீள்குடியேற்றம் செய்திருப்போம். நான் பல காஷ்மீர் பண்டிட்களிடம் பேசினேன். அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ‘என்ன மூர்க்கத்தனம் இது? 32 ஆண்டுகளில் எங்களை (காஷ்மீரில்) மீள்குடியேற்றம் செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு படம் எடுக்கிறார்கள். படம் எடுத்தால் மறுவாழ்வு கிடைக்குமா?’ எனக் காஷ்மீர் பண்டிட்கள் கேட்கிறார்கள்” என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார் கேஜ்ரிவால்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in