‘நாங்களும் பொது சிவில் சட்டத்தை விரும்புகிறோம்... ஆனால் பாஜக செய்வது ஏமாற்று வேலை!’

குஜராத் அரசைச் சாடும் அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால் கோப்புப் படம்

குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில பாஜக அரசு அறிவித்திருக்கும் நிலையில், பாஜக ஆளும் பிற மாநிலங்களில் ஏன் இச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் ஷரியா சட்டங்கள் காலாவதியாகிவிடும் என்பதால் இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழலில், குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என அம்மாநில உள் துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி நேற்று தெரிவித்தார். பிரதமர் மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் குஜராத் அரசின் இந்த அறிவிப்பைக் கடுமையாக விமர்சித்தார்.

பாவ்நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 44-வது கூறின்படி அதற்கான பொறுப்பு மாநில அரசுகளுக்குத்தான் உள்ளது. ஆனால், அனைத்து சமூகங்களின் ஒப்புதலுடன்தான் அதைச் செய்ய வேண்டும்” என்றார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டே இந்த அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்டிருப்பதாகக் கூறிய அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏன் இந்தச் சட்டம் கொண்டுவரப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின்போது இதே வாக்குறுதியை பாஜக வழங்கியது எனக் கூறிய அவர், “அந்தத் தேர்தலில் வென்ற பின்னர் இதுதொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், அக்குழு செயல்படவில்லை. ஆம் ஆத்மி கட்சியும் பொது சிவில் சட்டத்தை விரும்புகிறது. ஆனால், பாஜக செய்வது ஏமாற்று வேலை” என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in