‘ஹிஜாப் அணியக்கூடாது’ நள்ளிரவில் பெண் மருத்துவரிடம் தகராறு செய்த பாஜக பிரமுகர்

பணியில் மருத்துவர் ஜன்னத்
பணியில் மருத்துவர் ஜன்னத்

நாகை மாவட்டத்தில் பணியிலிருந்த அரசுப் பெண் மருத்துவரிடம், ‘ஹிஜாப் அணியக் கூடாது’ எனக்கூறி, தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் திருப்பூண்டி ஆரம்ப சுகாதார மையத்தில் மருவத்துவராக பணியாற்றுபவர் ஜன்னத் ஃபிர்தோஸ்(29). நேற்று முன்தினம் இவர் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிந்தாமணி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

பணியிலிருந்த மருத்துவர் ஜன்னத், சுப்பிரமணியனின் உடல்நிலையை பரிசோதித்து உடனடியாக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு உடன் வந்தோரிடம் தெரிவித்தார். சுப்பிரமணியனை அழைத்து வந்த புவனேஷ்ராம்(35) என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு மருத்துவரிடம் வாதிட்டார்.

சுப்பிரமணியனுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவரிடம் வலியுறுத்திய புவனேஷ்ராம், ‘நீங்கள் டாக்டர்தானா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஹிஜாப்பை அகற்றுங்கள்’ எனக்கூறி தகராறு செய்திருக்கிறார். அதனை வீடியோவாகவும் புவனேஷ்ராம் எடுக்கத்தொடங்கினார். பதிலுக்கு, மருத்துவர் ஜன்னத்தும் சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார்.

பணியிலிருக்கும் அரசு பெண் மருத்துவரிடம் பாஜக நிர்வாகி ஒருவர் தகராறில் ஈடுபடுவதாக தகவல் பரவியதும், இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டோர், மருத்துவமனை எதிரே வேளாங்கண்ணி - தூத்துக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர், நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து, பணியிலிருந்த அரசு ஊழியரை தொந்தரவு செய்தது உட்பட புவனேஷ்ராம் மீது 4 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கீழையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in