பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி: டாக்டர் சரவணன் மீது போலீஸில் பரபரப்பு புகார்

புகார் அளிக்க வந்த பாஜகவினர்
புகார் அளிக்க வந்த பாஜகவினர்

தமிழக நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் பேசும் ஆடியோ வைரலான நிலையில், முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் டாக்டர். சரவணன் மீது பாஜகவினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரான லட்சுமணனின் உடலுக்கு கடந்த 13-ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து காரில் திரும்பினார்.

அப்போது, அமைச்சர் கார் மீது பாஜகவினர் சிலர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சூழலில், அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட பாஜக தலைவரான மகா சுசீந்திரனிடம், மாநில தலைவர் அண்ணாமலை பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், "அதில் பேசியது நான் இல்லை என்றும் எடிட் செய்து ஆடியோ வெளியிட்டுள்ளனர்" என்றும் மகா சுசீந்திரன் விளக்கம் அளித்தார். இதனையடுத்து, இன்று மகா சுசீந்திரன் தலைமையிலான பாஜகவினர் 10-க்கும் மேற்பட்டோர் ஆடியோ வெளியானதற்கும் பாஜகவின் முன்னாள் மதுரை மாவட்ட தலைவரான சரவணனுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இன்று மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

தொடர்ந்து, மாநகர பாஜக தலைவர் மகா சுசீந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,, "பாஜக தலைவர் அண்ணாமாலைக்கு அவப்பெயர் ஏற்படுத்த திமுக அரசின் பின்னணியில் டாக்டர். சரவணன் ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். எனவே, சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளோம். நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தின் பின்னணியில் திட்டமிட்ட சூழ்ச்சி உள்ளது. சரவணன் தனது மருத்துவமனையில் செய்த மோசடியில் இருந்து தற்காத்துக்கொள்ள பாஜக மாநில தலைவர் மீது அவதூறு பரப்புகிறார்.

கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் விமான நிலையத்திற்கு செல்லாத பாஜகவினரைக் கூட காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in