டெல்லியை உலுக்கும் குப்பை அரசியல்!

ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் மோதிக்கொள்வதன் பின்னணி என்ன?
டெல்லியை உலுக்கும் குப்பை அரசியல்!

டெல்லியின் காஸிப்பூர் பகுதியில் குவிந்திருக்கும் குப்பைகளைப் பார்வையிடச் சென்ற முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து பாஜகவினர் நடத்திய போராட்டமும், பதிலடியாக ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

பாஜக Vs ஆம் ஆத்மி கட்சி

தலைநகர் டெல்லியில் உள்ள காஸிப்பூர் பகுதியில் குப்பைக் கூளங்கள் சேகரிக்கப்படும் மிகப் பெரிய இடம் இருக்கிறது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால், இன்று அந்தப் பகுதியைப் பார்வையிடச் சென்றார். அப்போது பாஜகவினர் கறுப்புக் கொடிகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி கட்சிக் கொடிகளைச் சாலையில் போட்டு மிதித்த பாஜகவினர், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தங்கள் நெஞ்சில் அறைந்தபடி அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதற்குப் பதிலடியாக ஆம் ஆத்மி கட்சியினரும் நெஞ்சில் அறைந்தபடி ‘பாஜக ஒழிக’ என கோஷமிட்டனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், “பாஜகவினர் போராட்டம் நடத்துவது ஆச்சரியமளிக்கிறது. பாஜகவினரால் நிர்வகிக்கப்படும் டெல்லி மாநகராட்சி என்ன செய்திருக்கிறது என்று பார்க்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். டெல்லியைச் சுத்தமாக வைத்திருக்கும் மிகப் பெரிய பொறுப்பு பாஜகவுக்கு இருந்தது. அதில் அக்கட்சி தோல்வியடைந்திருக்கிறது” என்றார். மேலும், “நாங்கள் உருவாக்கிய பள்ளிகளையோ, மொஹல்லா கிளினிக்குகளையோ பார்வையிட பாஜகவினர் வந்தால் நாங்கள் போராட்டம் எல்லாம் நடத்தமாட்டோம்” என்றும் அவர் கூறினார்.

என்ன பிரச்சினை?

டெல்லி மாநகராட்சி இதுவரை, தெற்கு, வடக்கு, கிழக்கு என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தது. 2017-ல் மூன்று மாநகராட்சிகளுக்கும் நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 272 இடங்களில் 181 இடங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. தற்போது மூன்று மாநகராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுவிட்டன. ஒருங்கிணைக்கப்பட்ட டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியிலோ 2023-ம் ஆண்டின் தொடக்கத்திலோ நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த மாநகராட்சிக்கு இனி மொத்தம் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

குஜராத் தேர்தலில் பாஜவுக்குப் போட்டியாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பாகப் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வெல்வதைத் தடுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது.

குப்பை மலை

டெல்லி நகரில் தினமும் சராசரியாக 11,000 டன் குப்பைகள் (திடக்கழிவுகள்) உருவாவதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு கமிட்டி தெரிவித்திருக்கிறது. இதில் 5,000 டன் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதம் உள்ளவை காஸிப்பூர், ஓக்லா, பல்ஸ்வா ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் குப்பைகள் மலை போல குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை மறுசுழற்சி செய்யும் பணி 2019 அக்டோபரில் தொடங்கியது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தப் பணி நிறைவடைய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கெடு விதித்திருக்கிறது.

இந்தச் சூழலில், டெல்லியின் மூன்று மாநகராட்சிகளையும் இதுவரை கையில் வைத்திருந்த பாஜக, குப்பை மேலாண்மையில் தோல்வியடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.

மறுபுறம், ஆம் ஆத்மி கட்சியினர் பொய் சொல்வதாகக் கூறும் பாஜகவினர், மாநகராட்சிகளுக்கு டெல்லி அரசு போதிய நிதியை வழங்குவதில்லை என்று பதிலடி கொடுத்துவருகிறது.

ஏற்கெனவே, ரூபாய் நோட்டுகளில் லக்‌ஷ்மி, விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் என்று கேஜ்ரிவால் கூறியிருப்பதை போட்டி இந்துத்துவா என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன. டெல்லியைச் சேர்ந்த முதியோர் இலவசமாகப் புனிதப் பயணத்தை மேற்கொள்ள டெல்லி அரசு ஏற்பாடு செய்ததைச் சுட்டிக்காட்டியிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், ராமாயணக் கதையில் தனது பெற்றோரை காவடியாகத் தூக்கிச் செல்லும் ஷ்ரவண் குமாருடன் (தமிழில் சிரவணக் குமாரன்) தன்னை ஒப்பிட்டுப் பேசுகிறார்.

இந்நிலையில், பாஜகவுக்கு எதிராகக் குப்பை அரசியலை ஆம் ஆத்மி கட்சி முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in