வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி வீடியோ பின்னணியில் பாஜக?: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபுவடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி வீடியோ பின்னணியில் பாஜக?: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி வீடியோ பின்னணியில் பாஜக இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மாநில அளவில் வட மாநிலத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என பரவிவரும் பொய்யான வதந்தி வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வதந்தி பரப்பும் கும்பலைப் பிடிக்க போபால், பாட்னா, டெல்லி, பெங்களூருவில் தனிப்படை போலீஸார் முகாமிட்டுள்ளனர். போலீஸார் எடுத்த நடவடிக்கை காரணமாக வதந்தி பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் அமைதி ஏற்பட்டுள்ளது.

வீடியோக்களை யார் எப்படி எடுக்கிறார்கள்? எப்படி பரப்புகிறார்கள் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனத்தினரை ஒருங்கிணைத்து வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நிறுவனத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் இந்த குழு ஆரம்பிக்கப்பட்டு இதில் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகள், வளாகம் போன்ற பகுதியில் கண்காணிப்பு கேகிரா அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ அந்த பகுதியில் போலீஸ் ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது உறவினர்களைத் தொடர்பு கொண்டு பேச, தேவையான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு மூலமாக தேவையான உதவிகள் மற்றும் வதந்தி பரவுவதை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வதந்தி வீடியோ விவகாரம் தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக்குத் தொடர்பு இல்லாத வீடியோக்களை போட்டு தமிழகத்தில் நடந்ததுபோல் காட்டி வதந்தி பரப்புகிறார்கள். இதை யார் எங்கே இருந்து எப்படி செய்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். போலீஸின் ரகசிய விசாரணையில் ஒரு கும்பல் பணத்திற்காக இதுபோல் வதந்தி வீடியோ தயாரித்து வெளியிடுவதை கண்டறிந்தோம்.

தாம்பரம் பகுதியில் ரோட்டோரம் தங்கி இருந்த ஒருவரை தாக்கியது போலவும், அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார், அவரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது போலவும் வீடியோ பதிவு செய்து வதந்தி ஏற்படுத்த முயன்றார்கள். இந்த வீடியோ பதிவு செய்த நபரை கைது செய்து இருக்கிறோம்.

பாஜகவின் பின்புலம் இதில் இருக்கிறதா என்பது  விசாரணைக்கு பின்னர்தான் தெரியவரும். கைது செய்யப்பட்ட சிலருக்கு அரசியல் பின்புலம் இருப்பதாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள், வீடியோக்களை பகிரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.‌

வட மாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று உள்ளனர். இவர்கள் 15 நாளில் திரும்பி வந்து விடுவார்கள். மாநில அளவில் சுமார் 10 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். மொத்தம் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு இதுவரை எடுக்கவில்லை. சில இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் டாஸ்மாக் கடையில் தகராறு, தாக்குதல் போன்ற சின்ன சின்ன பிரச்சனைகள் தான் இருக்கிறது.

குற்றவாளிகள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு அந்த இடம் மற்றும் சூழ்நிலையைப் பொருத்து ஏற்படுகிறது. சில இடங்களில் லத்தி பிரயோகம் செய்ய வேண்டியிருக்கிறது.‌ ஆபத்து ஏற்படும்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். திட்டமிட்டு துப்பாக்கி சூடு எதுவும் நடத்தப்படுவதில்லை

கூகுள் பே மூலம் பணம் அனுப்பி தவறுதலாக அனுப்பி விட்டோம் எனக்கூறி அதை திருப்பி அனுப்ப சொல்லி சில மோசடி கும்பல் கேட்பதாக தெரிகிறது. அவர்கள் கூகுள் பேவில் திரும்ப லிங்க் அனுப்பி அதன் மூலம் பணத்தை திருப்பி அனுப்ப சொல்லி கேட்கிறார்கள். அப்படி லிங்க் வந்தால் அதில் பணம் அனுப்ப வேண்டாம். அது திருடர்களின் கையில் சாவியைக் கொடுத்தது போலாகிவிடும். மேலும் ஒடிபி விவரங்களையும் யார் கேட்டாலும் சொல்லக்கூடாது. அப்படி தெரிவித்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய்விட வாய்ப்பு இருக்கிறது. எனவே, மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in