என்ஜின் வடிவ கேக் வெட்டி கொண்டாடப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 45-வது பிறந்தநாள்!

வைகை எக்ஸ்பிரஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்
வைகை எக்ஸ்பிரஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்தியாவின் சுதந்திர தின விழா வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தெற்கு ரயில்வே கோட்டத்தில் இயங்கி வரும் வைகை எக்ஸ்பிரஸ் தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடியது.

என்ஜின் வடிவ கேக்கை வெட்டிய ஊழியர்கள்
என்ஜின் வடிவ கேக்கை வெட்டிய ஊழியர்கள்

தெற்கு ரயில்வே கோட்டத்தின் சென்னை-மதுரைக்கு பகல் நேரத்தில் செல்லக்கூடிய விரைவு ரயிலாக அறிமுகமானது 'வைகை எக்ஸ்பிரஸ்'. இந்த ரயில் கடந்த 1977 ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. பகல் நேரத்தில் இயங்கும் இந்த விரைவு ரயிலால் தென் மாவட்ட வணிகர்கள் பெரிதும் பயனடைந்தனர்.

இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே, மீட்டர் கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையையும், மீட்டர் கேஜ் வகையில் ஆசியாவிலேயே அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையைப் பெற்றது. அதிக இழுவைத் திறன் கொண்ட என்ஜின் இணைக்கப்பட்டதும் இந்த ரயிலில் தான். அதே போன்று ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நவீன வசதிகளும் முதன்முதலாக இந்த ரயிலில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஓட்டுநர்களுக்கு தலைப்பாகை அணிவிக்கப்பட்டது
ஓட்டுநர்களுக்கு தலைப்பாகை அணிவிக்கப்பட்டது
என்ஜின் வடிவ கேக்
என்ஜின் வடிவ கேக்

தினந்தோறும் காலை 7.05 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டுப் 7 மணி 25 நிமிடங்கள் பயணித்து பிற்பகல் 2.30-க்கு சென்னையை சென்றடையும். மறு மார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு 7 மணி 35 நிமிடங்கள் பயணித்து இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். இச்சூழலில், கடந்த மார்ச் 3-ம் தேதி மதுரையிலிருந்து காலை 7 மணி 5 நிமிடங்களுக்குப் புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் இயந்திரக் கோளாறு காரணமாக 7.26-க்குப் புறப்பட்டுச் சென்றது. இருப்பினும், வழக்கமாக சென்னையை சென்றடைய வேண்டிய நேரமான 2.30 மணிக்கு முன்னதாக 2.07 மணிக்கு சென்றடைந்து சாதனை படைத்தது. மதுரை-சென்னை இடையேயான மொத்த தூரமான 497 கிலோமீட்டரை 6 மணி 40 நிமிடங்களில் கடந்தது, இந்திய ரயில்வேயின் குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இத்தகைய பெருமைகளைக் கொண்ட 'வைகை எக்ஸ்பிரஸ்' ரயிலின் 45-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை ரயில் நிலையத்தின் ஐந்தாவது நடைமேடையில் அலங்கரிக்கப்பட்ட என்ஜின்களுடன், என்ஜின் வடிவ கேக் வெட்டி ரயிலின் பிறந்தநாளை ரயில்வே ஆர்வலர்கள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் கொண்டாடினர். மேலும், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர்களுக்கு தலைப்பாகை அணிவித்து கவுரவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in