அச்சுறுத்தும் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல்: தமிழகம், கேரளத்தில் 18 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

அச்சுறுத்தும் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல்: தமிழகம், கேரளத்தில் 18 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

பறவைக்காய்ச்சல், ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் ஒட்டுமொத்த கேரள மக்களும் கலக்கத்தில் உள்ளனர். தமிழக அரசும் இவ்விசயத்தில் உஷாராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறது.

தமிழ்நாடு-கேரளா எல்லை பகுதியில்  தமிழ்நாட்டின் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும், கேரளாவின் திருவனந்தபுரம்,  கொல்லம்,  பத்தனம்திட்டா,  இடுக்கி, பாலக்காடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களும் அமைந்துள்ளன.

தமிழநாட்டின் நீலகிரி மாவட்டத்தில்  முதுமலை புலிகள் காப்பகம் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கீழ்கோத்தகிரி, கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் இருந்த  200க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் அண்மையில்  உயிரிழந்தன.  இதேபோல் தமிழ்நாடு - கேரளா, தமிழ்நாடு- கர்நாடகா மாநில வனப்பகுதிகளிலும் காட்டு பன்றிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த காட்டுப் பன்றிகளின் முக்கிய உடல் உறுப்புகளை ஆய்வு செய்த அந்தந்த மாநில அதிகாரிகள், இந்த பன்றிகள் அனைத்தும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் பாதித்து உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கேரளா வயநாடு பகுதியில் உள்ள பன்றிகளின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில், அப்பன்றிகள் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான உயர் பாதுகாப்பு தேசிய நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதனை உறுதி செய்த கேரள மாநில அரசு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதித்த 300 பன்றிகளைக் கொல்ல வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள, தொற்று உறுதி செய்யப்பட்ட பன்றிகளும் கொல்லப்பட வேண்டும் என உத்தரவிட்டது. உத்தரபிரதேசம், பிஹார், வடகிழக்கு மாநிலங்களிலும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளன. இதனை அடுத்து  அனைத்து விதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் அந்தந்த மாநிலங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கூடுதல் கவனத்துடன் பல்வேறு துறைகளும் இனைந்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் காரணமாக பன்றிகள் இறந்ததையடுத்து உடுமலை பகுதியில் கால்நடைத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் கால்நடை பராமரிப்புதுறை அதிகாரிகள் கூறுகையில், ``ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் காரணமாக பன்றிகள் இறந்ததையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கேரள எல்லைப்பகுதியான மானுப்பட்டி ஒன்பதாறு செக்போஸ்ட்டில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து வளர்ப்புக்காகவோ, இறைச்சிக்காகவோ பன்றிகள் கொண்டு வரவும், ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள பன்றிப் பண்ணைகளில் கால்நடைத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை உள்ளடக்கிய வனத்தில் காட்டுப் பன்றிகள் இறந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் நோய் ஆகும். இந்நோய் மனிதர்கள் மற்றும் பிற விலங்கினங்களுக்கு பரவாது. எனினும் பன்றிகளில் அதிகளவில் பரவி அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும். எனவே, காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால் பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, இந்நோய் பரவுவதை கட்டுப்படுத்த கால்நடைத்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பன்றி வளர்க்கும் பண்ணையாளர்கள், பண்ணையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். வெளியாட்களை பண்ணையில் அனுமதிக்கக்கூடாது. ஓட்டல் உணவு கழிவுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாவட்டதில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளும் கால்நடை உதவி மருத்துவர் மூலம் தீவிரமாக கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது'' என்று கூறினர்.

கோவை மாவட்டத்தில் 39 பன்றி பண்ணைகள் உள்ளன. இதில் 3600க்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளன. இதில் கால்நடை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பன்றிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகளும் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுகின்றனர். இதுவரை ஆப்பிரிகன் பன்றி காய்ச்சல் கண்டறியப்படவில்லை. அதே போல் கோவை மாவட்ட கேரளா எல்லைகளான வாளையார், வேலந்தாவளம் உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளிலும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன. பன்றி இறைச்சிகளை கொண்டுவர வேண்டாம் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக எல்லை பகுதியான பந்தலூர் அருகே குந்தலாடி மற்றும் பாட்ட வயல்,  சேரம்பாடி, சப்பந்தோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும்  பன்றி  பண்ணைகளை நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் நீலவண்ணன் உத்தரவின் பேரில் பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஏதேனும் நோய் தாக்கம் உள்ளதா என  ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நெலாக்கோட்டை கால்நடை மருத்துவர் காவண்யா மற்றும் கால்நடை துறையினர் குந்தலாடி பகுதியில் உள்ள பன்றி பண்ணையை ஆய்வு செய்து பன்றிகளுக்கு ஏதேனும் நோய்கள் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்து  வருகின்றனர்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி நீலவண்ணன் கூறுகையில், ``இந்த நோய் மனிதனை தாக்காது. பன்றிகளை தாக்கும். கேரளாவில் நோய் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளை ஆய்வு செய்து வருகிறோம்'' என்றார். இதே போல் தமிழ்நாடு முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் அலர்ட் செய்யப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் ஒருபுறம் இருக்க கேரளா மாநிலத்தை பறவைக்காய்ச்சல் வாட்டி வதைத்து வருகிறது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த வாத்துக்கள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து 3,000 பறவைகளை கொல்லும் பணி தொடங்கியுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம், அழூர் அருகே உள்ள பெருங்குழி பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்துப் பண்ணைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கோழி மற்றும் வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக இந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான கோழிகளும், வாத்துகளும் திடீரென சாகத் தொடங்கின. இவற்றின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக போபால் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பண்ணையில் உள்ள வாத்து, கோழிகளையும், மேலும் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பறவைகளையும் கொல்ல தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக 3,000 பறவைகளைக் கொல்லும் பணி நேற்று காலை முதல் தொடங்கியது.

இதற்கிடையே நோய் பாதிக்கப்பட்ட பண்ணையின் ஒரு கி.மீ சுற்றளவில் 9 கி.மீ பகுதியில் பறவை இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்பகுதியில் இருந்து இங்கு முட்டை, இறைச்சி கொண்டு வரவும், இங்கிருந்து வெளியே கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கோட்டயம் மாவட்டம் செம்பு பகுதியிலும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டடுள்ளது. இதையடுத்து அங்குள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் 300க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன.

"கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து மனிதர்களுக்கும் இந்நோய் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in