
கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் மசோதாவை சட்டமன்றத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார்.
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையத்தின் பெயரான 'கேரளா' என்பதை 'கேரளம்' என பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அரசியல் சாசனம் மற்றும் ஆவணங்களில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என மாற்றம் செய்ய அரசு விரும்பியது.
கேரளாவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவின் பெயரை மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டசபையில், முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று இன்றே சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது.
முன்னதாக, பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள மாநில அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது. அதில், பொது சிவில் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பார்வையாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.