
கோவில்பட்டியில் நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பைக்குகளை கும்பல் திருட தொடங்கியுள்ளது. திருட்டு கும்பல் பைக்குகளை திருடி செல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தங்கமாள் கோயில் அருகே உள்ள அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் கனிராஜ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். கனிராஜ் வழக்கமாக தனது பைக்கினை வீட்டின் முன்பு நிறுத்துவது வழக்கம். இதே போன்று நேற்று முன்தினம் இரவில் நிறுத்தியுள்ளார். இந்தநிலையில் காலையில் பார்க்கும் போது பைக்கை காணவில்லை. இதேபோன்று தனுஷ்கோடியாபுரத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரும் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கினை நேற்று காலையில் பார்க்கும் போது திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கனிராஜ், மனோஜ்குமார் இருவரும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மர்ம நபர்கள் இருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு இரு பைக்குகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் திருடப்பட்ட இரு பைக்குகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த காட்சிகளை கொண்டு போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக கோவில்பட்டி நகரில் வீடுகளில் திருட்டு, கோயில் உண்டியல் திருட்டு, ஸ்டூடியோ, செல்போன் கடை என திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது அந்த திருட்டு கும்பல் பைக்குகளை திருடி வருகிறது. ஆனால் திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகள் யாரூம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.