
பீகார் மாநிலத்தின் சாதிவாரியை உள்ளடக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள், அந்த மாநிலத்துக்கு அப்பாலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலிலும் இவை எதிரொலிக்க இருக்கின்றன.
முதல்வர் நிதிஷ் குமார் ஆட்சியிலான பீகார் மக்களில் மூன்றில் ஒரு பங்கினரின் குடும்ப வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது; 42 சதவீத பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள் வறுமையில் வாழ்கின்றனர்... என்பது உள்ளிட்ட அதிர்ச்சிகரமான தகவல்களை தற்போது வெளியாகி உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் இரண்டாவது தொகுப்பு தெரிவிக்கிறது.
29.61 சதவீதத்தினர் ரூ10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானத்தில் வாழ்க்கையை தள்ளுவதாகவும், இதற்கு அடுத்த நிலையில் சுமார் 28 சதவீதத்தினர் ரூ10,000 - ரூ50,000 இடையிலான வருமானத்தில் வாழ்வதாகவும், வெறும் 4 சதவீதத்தினர் மட்டுமே மாதம் ரூ 50 ஆயிரத்துக்கும் மேலாக சம்பாதிப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், 42.93 சதவீத பட்டியல் சாதியினரும், 42.70 சதவீத பழங்குடியினரும் வறுமையில் வாடுகின்றனர். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே, இந்த எண்ணிக்கை முறையே 33.16 சதவீதம் மற்றும் 33.58 சதவீதமாக உள்ளது. மற்ற சாதிகளை எடுத்துக்கொண்டால் அனைத்து குடும்பங்களிலும் 23.72 சதவீதம் ஏழைகள் என்கிறது புள்ளி விவர அறிக்கை.
பொருளாதாரம் மட்டுமன்றி எழுத்தறிவிலும் பீகார் அதிர்ச்சிகர புள்ளி விவரங்களை கொண்டிருக்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்வியறிவு என்பது 79.7 சதவீதமாக உள்ளது. கணக்கெடுப்பில் பங்கெடுத்தவர்களில் 22.67 சதவீதத்தினர் மட்டுமே 5-ம் வகுப்பு வரை படித்துள்ளனர். ஆனால் இதுவே பட்டியலினத்தோருக்கு 24.31 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 24.65 சதவீதமாகவும் உள்ளது. பொதுப்பிரிவினருக்கு இதுவே 17.45 சதவீதமாக இருக்கிறது. பட்டியலினத்தோரில் அதிர்ச்சிகரமாக 5.76 சதவீதத்தினர் மட்டுமே மேல்நிலைக் கல்வி வரையிலான பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள்.
5 மாநிலத் தேர்தல் ஆயத்தங்கள் மற்றும் வாக்குப்பதிவின் மத்தியில் வெளியாகி உள்ள இந்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள், அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடியை தந்துள்ளன. சாதிவாரி கணக்கெடுப்பை பொறுத்தளவில் காங்கிரஸ் கட்சி தெளிவாக இருக்கிறது ’5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் மாநிலங்களில் கணக்கெடுப்பு நிச்சயம்’ என்றும், ’மக்களவைத் தேர்தலில் வென்றால் தேசிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் நீண்ட தயக்கம் காட்டி வந்த பாஜகவும் இறங்கி வந்திருக்கிறது. ”பாஜக ஒருபோதும் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை. உரிய ஆய்வுக்குப் பின்னர் கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று அமித் ஷா உறுதியளித்துள்ளார். முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, "ஜாதியின் பெயரால் நாட்டைப் பிரிக்க முயற்சிப்பவர்கள்" என்று தாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்