
பிஹார் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஹன்ஸ் மற்றும் முன்னாள் ஆர்ஜேடி எம்எல்ஏ குலாப் யாதவ் மீது கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் உயர் நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து, அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
பிஹாரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் ஹன்ஸ் மாநில எரிசக்தித் துறையில் முதன்மைச் செயலாளராக உள்ளார். குலாப் யாதவ் மதுபானி மாவட்டத்திலுள்ள ஜாஞ்சர்பூர் தொகுதியின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
அவுரங்காபாத் மாவட்டத்தில் வசிக்கும் பெண் வழக்கறிஞர், முன்னாள் எம்.எல்.ஏ குலாப் யாதவ் தன்னை மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக்குவதாக வாக்குறுதியளித்து 2016-ல் பாட்னாவின் ருகன்புராவில் உள்ள தனது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தார் என்றும், அதன் பின்னர் வீடியோவை காட்டி மிரட்டி, டெல்லி மற்றும் புனேவில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் ஐஏஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் ஹன்ஸ் மற்றும் குலாப் யாதவ் இருவரும் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் எப்ஐஆரில் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின் அந்த பெண்ணுக்கு டிசம்பர் 25, 2018ல் மகன் பிறந்தார்.
அந்த பெண் 2021-ல் இது தொடர்பாக ரூபாஷ்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால், போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். காவல்துறை தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதை அடுத்து, அந்தப் பெண் டானாபூர் நீதிமன்றத்தில் முறையிட்டார், ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அவர் பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு சென்றார். காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை எப்ஐஆர் பதிவு செய்ய டானாபூர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஐபிசியின் பிரிவுகள் 323, 341,376(D) 420, 313, 120(B), 504,506 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் மகனுக்கு ஜனவரி 12-ம் தேதி விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.