பிஹாரில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக உயர்வு: எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

பிஹாரில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக உயர்வு: எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

பிஹார் மாநிலம் சாப்ரா பகுதியில் கள்ளச் சாராயம் குடித்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

பிஹார் மாநிலம் சாப்ராவில் நேற்று முன்தினம் கள்ளச் சாராயம் அருந்திய பலர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இன்னும் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சாப்ரா ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ரித்தேஷ் மிஸ்ரா மற்றும் கான்ஸ்டபிள் விகேஷ் திவாரி ஆகியோர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பிஹாரில் மது விற்பனை மற்றும் நுகர்வுக்கு ஏப்ரல் 2016ல் நிதிஷ் குமார் அரசு தடை விதித்தது.

சாப்ராவில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இழப்பீடு வழங்க பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ”கள்ளச்சாராயம் அருந்தினால் இறந்து போவது நிச்சயம். இதற்கு தற்போது ஒரு உதாரணம் காட்டப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மதுவிலக்கு அமலில் இருக்கும்போது, தடையைமீறி ​​விற்கப்படும் மதுபானங்களில் ஏதேனும் தவறு நிச்சயம் இருக்கும். நினைவில் கொள்ளுங்கள். மக்கள் யாரும் மது அருந்தக்கூடாது" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், முதல்வர் நிதிஷ்குமாரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக எம்.பி சுஷில் மோடி, "கடந்த 6 ஆண்டுகளில் பிஹாரில் 1,000க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயத்தால் இறந்துள்ளனர். மாநிலத்தில் காவல்துறை உள்ளதா? சட்டசபையில் நிதிஷ் குமார் நடந்துகொண்ட விதம் சரியில்லை, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

பிஹார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குமார் சின்ஹா, "சாப்ரா சோகத்தில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மாநில அரசு எந்த பிரேத பரிசோதனையும் இல்லாமல் உடல்களை எரித்து மறைத்துவிட்டது" என்று ​​கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in