‘என் அப்பா குடிக்கிறார்... நான் படிக்க வேண்டும்!’ - நிதீஷ் குமாரை அதிரவைத்த சிறுவன்

பிஹார் முதல்வர் நிதீஷ் குமார்
பிஹார் முதல்வர் நிதீஷ் குமார்

பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்த ஊரான கல்யாண் பிகாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 11 வயது சிறுவன் ஒருவன் தன் குடும்ப நிலையை அவரிடம் முறையிட்டு தனது கல்விக்கு உதவுமாறு கோரினான். மதுவுக்கு அடிமையான தனது தந்தை குறித்தும் அச்சிறுவன் முதல்வரிடம் முறையிட்டான். கூடவே, ஆசிரியர்களின் தகுதி குறித்தும் பகிரங்கமாகப் புகார் தெரிவித்தான்.

மறைந்த தனது மனைவி மஞ்சு சின்ஹாவின் நினைவுதினத்தை அனுசரிப்பதற்காக நாளந்தா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான கல்யாண் பிகாவுக்குச் சென்றிருக்கிறார் நிதீஷ் குமார். அங்கு தனது தந்தை கவிராஜ் ராம்லகன் சிங்கின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவில், தனது மனைவியின் திருவுருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார்.

பின்னர், அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சோனு குமார் எனும் 11 வயது சிறுவன் அவரைக் கைகூப்பி வணங்கி, “அய்யா, என் கல்விக்கு உங்கள் உதவி தேவை. என் தந்தை எனக்கு உதவவில்லை” என்று கூறி அழத் தொடங்கினான்

இதையடுத்து, அச்சிறுவனின் புகார் குறித்து விசாரிக்குமாறு அருகில் இருந்த அதிகாரிகளுக்கு நிதீஷ் குமார் உத்தரவிட்டார்.

அவர்களிடம் பேசிய அச்சிறுவன், “நான் அரசுப் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்துவருகிறேன். அங்கு கற்பித்தலின் தரம் மிக மோசம். எனது கணித ஆசிரியருக்கு எண்கள் விஷயத்திலேயே பிரச்சினை இருக்கிறது. அடிப்படை ஆங்கிலம்கூட அவருக்குத் தெரியவில்லை. நான் குடிமைப் பணியில் சேர விரும்புகிறேன். ஆனால், தரமற்ற கல்வியும் என் குடும்பத்தின் அவலச் சூழலும் அதற்கு இடமளிக்கவில்லை” என்று கூறினான்.

மேலும், “என் தந்தை பால் பொருட்களை விற்பனை செய்துவருகிறார். அவர் என் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. சம்பாதிப்பதையெல்லாம் மது அருந்துவதிலேயே செலவழிக்கிறார்” என்று அச்சிறுவன் தெரிவித்தான்.

பிஹாரில் நிதீஷ் குமார் அரசு மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கும் நிலையில், அங்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கள்ளச்சாராயம் அருந்தி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், அரசுப் பள்ளியில் கல்வித் தரம் மோசம் என்றும், தனது தந்தை மது அருந்துவதால் குடும்பம் சீர்குலைந்திருப்பதையும் முதல்வரிடமே நேரடியாக அச்சிறுவன் முறையிட்டிருப்பது பிஹாரில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, நிதீஷ் குமார் அரசு குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in