உக்ரைனில் ஜோ பைடன் - ஸெலென்ஸ்கி
உக்ரைனில் ஜோ பைடன் - ஸெலென்ஸ்கி

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம்: உக்ரைனில் அமெரிக்க அதிபர் உலா

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னறிவிப்பின்றி உக்ரைனில் உலா வந்தது ரஷ்யாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

திங்களன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் விஜயமாக உக்ரைனில் சென்று இறங்கினார். 3 நாள் போலந்து பயணமாக திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க அதிபரின் பயணம், உலக நாடுகள் எதிர்பாராத வகையில் உக்ரைனில் நிலைகொண்டிருக்கிறது. உக்ரைன் தேசத்தை பல்வேறு திசைகளிலிருந்து ரஷ்ய துருப்புகள் தாக்குதல் தொடுத்து வருவதன் மத்தியில், போர்க்கள் பூமியில் அமெரிக்க அதிபர் உலா வந்திருப்பது ரஷ்யாவை அதிரச் செய்திருக்கிறது. இதன் மூலம் ரஷ்யாவுக்கு, வலுவான சேதியையும் அமெரிக்கா கடத்தியிருக்கிறது.

கடந்தாண்டு பிப்.24 அன்று உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியது. அதன் ஓராண்டு நிறைவினையொட்டி, தனது போர்த் தாக்குதல் பிரதாபங்களை வெளிக்காட்டும் முனைப்பில் ரஷ்யா இருந்தது. ஆனால் அதற்கு இடம்கொடாது, அமெரிக்க அதிபர் அங்கே நடமாடி இருக்கிறார். உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி உடன் அவர் கீவ் நகரை பார்வையிட்டார். இதன் மூலம், உக்ரைனுக்கு அனைத்து வகையிலும் துணையாக இருப்போம் என்று ரஷ்யாவுக்கும், உலக நாடுகளுக்கும் அமெரிக்கா சேதி தந்திருக்கிறது.

கிழக்கு உக்ரைன் உட்பட பல்வேறு பிராந்தியங்களில் ரஷ்யா பின்னடைவை சந்தித்து வருவதன் மத்தியில் அமெரிக்க அதிபர் உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது ரஷ்யாவை சீண்டியிருக்கிறது. அமெரிக்கா எதிர்பார்த்ததும் இதைத்தான். இன்னொரு பக்கம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அனைவரும் பெல்ஜியம் தலைநகர் புருசல்ஸில் கூடி, உக்ரைனுக்கான ஆயுதத் தளவாடங்களின் இருப்பு மற்றும் தேவை குறித்து விவாதித்து வருகிறார்கள்.

இதனிடையே, மேற்கு நாடுகளின் இந்த அதிரடிக்கு எதிராகவும், உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவை முன்னிட்டும், ரஷ்யா தனது போர் வியூகங்கள் மற்றும் சர்வதேச அரசியல் நிலைப்பாடுகளில் எடுக்கும் மாற்றமும் அடுத்த சில நாட்களில் வெளிப்பட இருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in