குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு

குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு
குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பூபேந்திர படேல்

குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் (59) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் பூபேந்திர படேல் முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். காத்லோடியா சட்டமன்றத் தொகுதியில் 2017 தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு வென்ற பூபேந்திர படேல், இதுவரை அமைச்சராகக்கூட பதவி வகித்திராதவர்.

இன்று மதியம் காந்திநகரில் பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், பூபேந்திர படேலின் பெயரை விஜய் ரூபானி முன்மொழிந்தார். இதையடுத்து ஒரு மனதாக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் இந்த பூபேந்திர படேல்?

நீண்ட நாள் ஆர்எஸ்எஸ் தொண்டரான இவர், சிவில் என்ஜினியரிங் படிப்பில் பட்டயம் பெற்றவர். அகமதாபாத் மாநகராட்சியில் நிலைக்குழுவின் தலைவராகப் பதவிவகித்தவர். குஜராத் அரசியலைத் தீர்மானிக்கும் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர். அச்சமூகத்தின் சில அறக்கட்டளைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

இவர் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேலின் நம்பிக்கைக்குரிய தலைவராகக் கருதப்படுபவர். முதல்வர் பதவிக்குத் தன்னைத் தேர்ந்தெடுத்ததற்காகப் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருக்கும் பூபேந்திர படேல், ஆனந்திபென் படேலின் ஆசியும் தனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி எனத் தெரிவித்திருக்கிறார். காத்லோடியா தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வந்த ஆனந்திபென், ஆளுநரான பின்னர் அந்தத் தொகுதியில் பூபேந்திர படேல்தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி சீட் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

படேல் சமூகத்தைத் திருப்திப்படுத்தும் முயற்சியா?

சமீப காலமாகப் பிற எதிர்க்கட்சிகளைவிட ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு வருகிறது. தங்கள் சமூகத்தவர் முதலமைச்சராக முடியவில்லையே என்ற ஆதங்கம் படேல்களுக்கு அதிகரித்து வந்தது. இந்தச் சூழலில்தான் படேல் சமூகத்தைச் சேர்ந்த பூபேந்திராவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் துணை முதல்வர் நிதின் படேல் ஏன் முதலமைச்சர் பதவிக்குப் பரிசீலிக்கப்படவில்லை என்று தெரியவில்லை.

முதல்வராக இருந்த விஜய் ரூபானி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் திருப்திகரமாகச் செயல்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. அவர் பதவிவிலக அதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

பூபேந்திர படேல் தலைமையிலான அரசு செயல்படும் விதத்தை வைத்தே குஜராத் தேர்தலில் பாஜகவின் வெற்றி / தோல்வி தீர்மானிக்கப்படும்.

Related Stories

No stories found.