நாசி வழி கரோனா தடுப்பு மருந்து: எப்போது கிடைக்கும்? என்ன விலை?

நாசி வழி கரோனா தடுப்பு மருந்து: எப்போது கிடைக்கும்? என்ன விலை?

நாட்டில் கரோனா அடுத்த அலைக்கான சாத்தியங்கள் குறித்து மக்கள் மத்தியில் கவலைகள் கூடி வருகின்றன. இவற்றினூடே தேக்கமுற்றிருந்த கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் வேகம் பிடித்துள்ளன.

வழக்கமான கரோனா கட்டுப்பாடுகளுடன் புதிய நடவடிக்கைகளையும் அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் நாசி வழி கரோனா தடுப்பு மருந்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

’பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் தயாரிப்பான ’இன்கோவாக்’ என்னும் நாசி வழி கரோனா தடுப்பு மருந்து, வரும் ஜனவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் மையங்களில் கிடைக்கும் இந்த மருந்தின் விலை ரூ.800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 5% ஜிஎஸ்டி வரி தனி ஆகும். இதுதவிர பதிவுக் கட்டணத்துக்காக சிறு தொகை செலுத்த நேரிடலாம். ஒட்டுமொத்தமாக நாசி வழி கரோனா தடுப்பு மருந்துக்கு ரூ.1000 வரை செலவிட வேண்டியிருக்கும். அடுத்து அறிவிப்பாக இருக்கும் அரசு முகாம்களில் இதன் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுவரை கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என 2 டோஸ் கரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டோர், கூடுதலாக பூஸ்டர் டோஸ் என்றளவில் பாரத் பயோடெக்கின் நாசி வழி கரோனா தடுப்பு மருந்தை பெறலாம். இதுவரை கரோனா தடுப்பூசிகளே போடாதவர்கள், 2 டோஸ் தடுப்பூசிகளுக்கு நிகராக இந்த நாசி வழி மருந்தினை பெற்றுக்கொள்ளலாம்.

முன்னதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு முறைப்படி அனுமதி வழங்கி இருந்தது. மேலும், கரோனா பரவலை தடுக்க, முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளி பராமரித்தல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை மீண்டும் கைக்கொள்ளுமாறும் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in