பாழாகும் பலகோடி கரோனா தடுப்பூசி மருந்து: பதற்றத்தில் பாரத் பயோடெக்

சுமார் 25 கோடி டோஸ் மருந்துகளின் எதிர்காலம் கேள்விக்குறி
பாழாகும் பலகோடி கரோனா தடுப்பூசி மருந்து: பதற்றத்தில் பாரத் பயோடெக்

கரோனா தடுப்பூசிக்கான தேவையும், நெருக்கடியும் குறைந்ததில், இருப்பிலுள்ள கோடிக்கணக்கான தடுப்பூசி மருந்துகள் வீணாகும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கவலை கொண்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் கோவிஷீல்ட், கோவாக்ஸின் என்று இரு தடுப்பூசிகள் பல கோடி உயிர்களை காக்க உதவின. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த தடுப்பூசிகள் உலகம் முழுமைக்கும் பல நாடுகள் இறக்குமதி செய்து பயன்படுத்தின. ஒன்றுக்கும் மேற்பட்ட டோஸ்கள், அடங்காத கரோனா திரிபுகள் என கரோனா நெருக்கடி உச்சத்திலிருந்த காலத்தில் அதிகளவில் இந்த தடுப்பூசி மருந்துகள் தேவைப்பட்டன. கொத்துக்கொத்தாய் மக்கள் செத்து விழுந்ததில் தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு நிலவியது.

ஆனால் கரோன பரவலின் வேகம் படிப்படியாக குறைந்ததில் மக்கள் மத்தியில் அச்சம் விலகியது. இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள் கரோனா விழிப்புணர்வையும் மறந்து போனார்கள். பூஸ்டர் டோஸ் மட்டுமன்றி, அடிப்படையான அடுத்தடுத்த டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதோர் இந்தியாவில் அநேகம் உள்ளனர். இவர்களை நம்பி தடுப்பூசிகளை உற்பத்தி செய்த மருந்து நிறுவனங்களின் கதி பரிதாபமாகி உள்ளது. இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் கரோனா தடுப்பூசிகளின் தேவை குறைந்திருப்பதில் அவற்றின் இறக்குமதியையும் அந்நாடுகள் நிறுத்திவிட்டன. சில நாடுகளில் இந்திய தடுப்பூசிகளுக்கு எதிரான புகார்கள் எழுந்ததும் சர்ச்சையில் நீடிக்கிறது.

இந்திய தடுப்பூசிகளில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொள்ளை லாபம் சம்பாதித்தது கோவிஷீல்ட். அதார் பூனாவாலாவின் சீரம் மருந்து நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசி விற்பனையில் முன்நின்றது. சந்தையில் பின்தங்கிய வகையிலும் பாதிப்பு கண்டிருந்த பாரத் பயோடெக் நிறுவனம் தற்போது இன்னொரு பரிதாபத்தை சந்திக்கிறது. இந்த நிறுவனத்தின் சுமார் 25 கோடி தடுப்பூசி மருந்துகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அவற்றிலும் சுமார் 5 கோடி மருந்துகள் அடுத்து வரும் சில மாதங்களில் காலாவதியாக உள்ளன. மொத்த இருப்பில் உள்ள 20 கோடி தடுப்பூசி மருந்துகளும் அடுத்தகட்டமாய் இழப்பை சந்திக்க இருக்கின்றன.

கரோனாவையும் அதன் கசப்பான அனுபவங்களையும் திரும்பி பார்க்க விரும்பாத வெகுஜனம், தற்போது தடுப்பூசி நிறுவனங்களின் பரிதவிப்பையும் ஏறெடுப்பதாக இல்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in