சுதந்திர தினத்தில் விருது பெறப்போகும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி எது?- வெளியானது பட்டியல்

சுதந்திர தினத்தில் விருது பெறப்போகும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி எது?- வெளியானது பட்டியல்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக முதல்வரின் விருதுக்குச் சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிப்புத்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நடப்பு ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியைத் தேர்வு செய்வதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த ஆய்வின் அடிப்படையில் அதிக மதிப்பெண்களுடன் தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலிடமும், குடியாத்தம் இரண்டாவது இடமும், தென்காசி மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூரும், சிறந்த நகராட்சியாக உதகையும் தேர்வு செய்யப்பட்டது. தற்போது முதலிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சேலம் மாநகராட்சிக்கு 25 லட்ச ரூபாயும், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சிக்கு 15 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. சுதந்திர தினத்தன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் விழாவில் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்குகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in