
கர்நாடகாவின் முக்கிய நகரமான பெங்களுருவில் 2021ம் ஆண்டை ஒப்பிடும் போது, 2022ம் ஆண்டில் காற்றின் தரம் மோசமடைந்தது கண்டறியப்பட்டது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐகியூஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவின் காற்றின் தரம் 2022ம் ஆண்டில் 8 சதவிகிதத்திற்கும் மேலாக மோசமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐகியூஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022ல் பெங்களூரு பிஎம்2.5 அளவுகள் 31.5 µg/m³ ஆக இருந்தது, இது 2021ல் பதிவு செய்யப்பட்ட 29 µg/m³ ஐ விட 8.6 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் நகரத்திற்கு மோசமான மாதமாக இருந்தது, அப்போது பிஎம்2.5 அளவு 45.8 µg/m³ ஆக உயர்ந்தது. நகரத்தில் பிஎம்2.5 அளவுகள் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை 18.1 µg/m³ இலிருந்து 36.9 µg/m³ ஆக உயர்ந்தது என்று அறிக்கை கூறுகிறது. தீபாவளி கொண்டாட்டங்களுடன் குளிர்கால விளைவும் இணைந்த பிறகு நகரத்தில் காற்றின் தரம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்தது.
2021 ம் ஆண்டை விட 2022 ம் ஆண்டில் பெங்களூருவில் காற்றின் தரம் மோசமாகியுள்ளது, ஏனெனில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு வழக்கம்போல அலுவலகத்திற்கு ஊழியர்கள் திரும்பத் தொடங்கியதால், நகரில் மாசுபாடும் அதிகமாகியுள்ளது.
பெங்களுருவின் காற்றின் தரம் பருவமழைக் காலத்தில் மிகச் சிறப்பாக இருந்தது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பிஎம்2.5 அளவுகள் 14 முதல் 15 µg/m³ ஆக இருந்தது. 2022ன் முதல் நான்கு மற்றும் கடைசி மூன்று மாதங்களில் நகரம் 37 மற்றும் 46 க்கு இடையில் அதிக அளவுகளைக் கண்டது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பெங்களூரு மாநகராட்சி இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.450 கோடியை ஒதுக்கியுள்ளது.