ஜூலை 25 முதல் மீண்டும் இயக்கப்படுகிறது பெங்களூரு- காரைக்கால் ரயில்: மகிழ்ச்சியில் பயணிகள்

ஜூலை 25 முதல் மீண்டும் இயக்கப்படுகிறது பெங்களூரு- காரைக்கால் ரயில்: மகிழ்ச்சியில் பயணிகள்

கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெங்களூரு - காரைக்கால் ரயில் எதிர்வரும் 25 -ம் தேதியிலிருந்து மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது ரயில் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து பெங்களூருவுக்கும், பெங்களூருவில் இருந்து காரைக்காலுக்கும் இயங்கும் இந்த ரயில் சேவை, டெல்டா மாவட்ட மக்களை கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. கரோனா காரணமாக அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்ட போது இந்த ரயிலும் நிறுத்தப்பட்டது.

கரோனா தொற்றின் வேகம் குறைந்து பெரும்பாலான ரயில்கள் இயக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த ரயில் இயக்கப்படாமல் இருந்தது. இதனை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஃபாஸ்ட் பாசஞ்சராக (56513/56514) இயங்கிய ரயில், விரைவு ரயிலாக மாற்றம் (16529/16530) செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து ஜூலை 25-ம் தேதியும், காரைக்காலில் இருந்து 26-ம் தேதியும் இயக்கப்படுகிறது. கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திற்கு பதிலாக புதிதாக திறக்கப்பட்ட பையபனஹள்ளியில் இருக்கும் எஸ்எம்விபி டெர்மினல் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

காலை 5.30 மணிக்கு காரைக்காலில் இருந்து கிளம்பி, 6.40 மணிக்கு திருவாரூர், 7.38 மணிக்கு மயிலாடுதுறை, சிதம்பரம் 8.28 மணிக்கு, கடலூர் துறைமுகம் 9.10 மணிக்கு, விருத்தாசலம் 10.50 மணிக்கு, சேலம் 14.40 மணிக்கு, ஓசூர் 19.24 மணிக்கு, பையபனஹள்ளி 21.30 மணிக்கு சென்று சேரும்.

இதேபோல் பையபனஹள்ளியில் இருந்து காலை 7.30 மணிக்கு கிளம்பி, ஓசூர் 8:46 மணிக்கு, சேலம் 12.55 மணிக்கு, விருத்தாசலம் 16.15 மணிக்கு, கடலூர் துறைமுகம் 18.05 மணிக்கு, சிதம்பரம் 18.48 மணிக்கு, மயிலாடுதுறை 19.45 மணிக்கு, திருவாரூர் 20.50 மணிக்கும் கடைசியாக 22.35 மணிக்கு காரைக்கால் வந்து சேரும். தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் ரயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in