இந்தி ஏகாதிபத்தியத்தின் முன்பு வங்காளிகள் சரணடையமாட்டோம்: கொல்கத்தாவில் நடந்த பிரமாண்ட பேரணி

இந்தி ஏகாதிபத்தியத்தின் முன்பு வங்காளிகள் சரணடையமாட்டோம்: கொல்கத்தாவில் நடந்த பிரமாண்ட பேரணி

இந்தி ஏகாதிபத்தியத்தின் முன் வங்காளிகள் சரணடைந்து விடுவார்கள் என்று நினைக்க வேண்டாம் என கொல்கத்தாவில் நடந்த பிரமாண்டமான பங்களா போக்கோ பேரணியில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள வங்காளிகளின் தேசிய அமைப்பான பங்களா போக்கோ, தேர்வுகள், கல்வி மற்றும் தகவல் உட்பட மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்தும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மாபெரும் கண்டனப் பேரணியை நேற்று கொல்கத்தாவில் நடத்தியது.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்வதாகவும், இது வங்காளிகளின் தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினர் மற்றும் இந்தி அல்லாத பிற மக்கள் அனைவரையும் இந்தி ஏகாதிபத்தியத்தின் நிரந்தர அடிமைகளாக மாற்றும் எனவும் இந்த பேரணியில் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரவீந்திர சதானிலிருந்து நடந்த அணிவகுப்பிலும், ஹஸ்ராவில் நடந்த கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான மேற்கு வங்க மக்கள் கலந்து கொண்டனர். மேலும், மேற்கு வங்கத்தில் வாழும் தமிழர்கள், கன்னடர்கள், பஞ்சாபியர்களும் இப்பேரணியில் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் இந்தி ஏகாதிபத்தியத்தை கண்டிக்கும் பதாகைகளும், ஆச்சார்யா பிரபுல்ல சந்திர ரே, சித்தரஞ்சன் தாஸ், அசோக் மித்ரா, அறிஞர் அண்ணா, குவெம்பு, கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு குறித்த மேற்கோள்கள் கொண்ட பெரிய கட்-அவுட்களும் இருந்தன. வரும் அக்டோபர் 16ம் தேதி மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்களா போக்கோ போராட்டங்களை நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் பேசிய பங்களா போக்கோ அமைப்பின் பொதுச் செயலாளர் கர்கா சட்டர்ஜி, "இந்தி ஏகாதிபத்தியத்தின் முன் வங்காளிகள் சரணடைவார்கள் மற்றும் பணிந்து விடுவார்கள் என்று டெல்லி நினைத்தால், அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். எங்களுக்கு சமமான மொழி உரிமை வேண்டும். தங்கள் குழந்தைகளை இந்தி அடிமைகளாக்குவதற்காக வங்காள தியாகிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுக்கவில்லை. இந்தி திணிப்பை அனுமதித்தால் வங்காளத்தின் புனித பூமியில் இருந்து அனைத்து அடையாளங்களையும் அழித்து விடுவார்கள். இந்தி அல்லாத நேர்மையான மக்கள் அனைவரும் எங்களுடன் நிற்கிறார்கள். இந்தி ஏகாதிபத்தியம் இந்தியாவின் ஒற்றுமையை அழிக்க நினைக்கிறது. நாம் ஒற்றுமையை காப்போம் பாஜகவும், டெல்லியும் நெருப்புடன் விளையாடக் கூடாது” என தெரிவித்தார்

இந்த அமைப்பின் செயலர் கவுசிக் மைதி கூறுகையில், "இந்தி திணிக்கப்பட்டால், வங்காளிகள் இறுதிவரை எதிர்ப்பார்கள் என்பதை, கொட்டும் மழையில் நடக்கும் இந்த பேரணி நிரூபித்துள்ளது. கட்சி, நம்பிக்கை, வர்க்கம் மற்றும் பிற கருத்துகளுக்கு அப்பால் அனைத்து வங்காளிகளும் ஒன்றுபட வேண்டும்" என்றார்.

பல பிரபல வங்காளி அறிவுஜீவிகளும் பங்களா போக்கோவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக பேசிய கவிஞர் ஜாய் கோஸ்வாமி, "நோய் காரணமாக என்னால் இப்பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும், இந்த போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்" என்றார். கல்வியாளரான பபித்ரா சர்க்கார், "இந்த வகையான இந்தி திணிப்பு கூட்டாட்சி அமைப்பு மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது" என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in