குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலையில் இதனால் இஸ்ரோவுக்கும், இந்தியாவுக்கும் பெரிய அளவில் பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்துக்கான அடிக்கல்லை இன்று நாட்ட இருக்கிறார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினத்தில் தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
குலசேகரப்பட்டினத்தை இஸ்ரோ தேர்ந்தெடுத்ததற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. பொதுவாக ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் விண்கலங்கள் தென்துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து ஏவப்பட வேண்டும். அப்போது தான் பூமியின் சுழல் வேகமான 0.5 கிமீ/செகண்ட் கூடுதலாக கிடைக்கும். அதன்மூலம் ஒரு ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களைக் கூட எளிதாக ஏவ முடியும்.
ஏவுகலங்களில் இருந்து பிரிந்து வரும் பாகங்கள் கடலில் தான் விழ வேண்டுமே தவிர மக்கள் வசிக்கும் நிலபரப்பின் மீது விழக்கூடாது. அப்படி விழுந்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இந்த விதிமுறை மிக முக்கியமானது. இந்த விதியை கருத்தில் கொண்டு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் பாகங்கள் இலங்கை நாட்டின் மீது விழுந்து விடக்கூடாது என்பதால் ராக்கெட்டுகள் 'Dogleg maneuver' எனும் முறையில் விண்ணில் ஏவப்படுகின்றன.
இந்த முறையில் ஏவும் போது எரிபொருள் அதிகமாக செலவாகும். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவும்போது இலங்கை நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், எரிபொருளையும், செலவுகளையும் மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்கும். மேலும் ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும். அந்தப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது.
புயல், மின்னல், மழையின் தாக்கமும் அங்கு குறைவாக இருக்க வேண்டும். குலசேகரபட்டினம் இந்த அனைத்து அம்சங்களையும் கொண்ட இடமாக உள்ளது. எனவேதான் இஸ்ரோ இந்த இடத்தைத் தேர்வு செய்துள்ளது. அத்துடன் வேறொரு முக்கிய காரணமும் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் இஞ்ஜினின் எரிபொருளான திரவ ஹைட்ரஜனும், கேரள மாநிலம் தும்பாவில் ராக்கெட் பாகங்கள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.
அங்கிருந்து வெகு தொலைவில், ஆந்திராவில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அவற்றைக் கொண்டு செல்வதில் கால தாமதம், பாதுகாப்பு பிரச்னை, கூடுதல் செலவு, சேதம் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், குலசேகரப்பட்டினம் அருகிலேயே இருப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படாது எனவும் சொல்லப்படுகிறது.