
பெற்றக் குழந்தைகள் ஐவரை கழுத்தறுத்து கொன்ற தாயின் வேண்டுகோளுக்கு ஏற்ப, 16 ஆண்டுகள் கழித்து அவர் கருணைக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
2007, பிப்ரவரி 28 அன்று பெல்ஜியம் நாட்டில் அந்த சம்பவம் நடந்தேறியது. நிவலெஸ் நகரில் வாழ்ந்த தாய் ஒருவர் தனது 5 குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொன்றார். துள்ளத்துடிக்க அவர்கள் இறந்த பிறகு அதே கத்தியால் தன்னைக் குத்திக்கொண்டு சாக முயன்றார். ஆனால் வலி தாங்காது அவரச உதவிக்கு போன் செய்ததில், அவர் உயிர் பிழைத்தார்.
3 முதல் 14 வயதுக்கு இடைப்பட்ட 5 குழந்தைகளையும் காய்கறி நறுக்கும் கத்தியால் நிதானமாக கழுத்தறுத்து கொன்ற தாயும், அதனையொட்டிய உறைச்செய்யும் சம்பவமும் பெல்ஜியத்துக்கு அப்பாலும் மக்களை அதிரச் செய்தன. விரைந்து நடைபெற்ற வழக்கில் அடுத்த ஆண்டே அவர் மீது ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்பானது. ஆனால் ஜெனிவீவ் என்ற அந்த கொலைகாரத் தாயை பொறுத்தவரை வழக்கு தீரவில்லை.
மன அழுத்தத்துக்காக சிரமப்பட்ட தனக்கு, மனநல மருத்துவர் முறையான சிகிச்சை அளிக்காததே இந்தக் கொலைகளுக்கு காரணம் என சிறையில் இருந்தபடி தனது முன்னாள் மருத்துவர் மீது வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு அவருக்கு தோல்விகரமானது. இந்த வழக்கின் மூலம் தனது குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட அவர் முயன்றார். அதற்கு வாய்ப்பில்லாது போகவே, குழந்தைகளின் நினைவாலும், சிறையின் தனிமையாலும் மிகுந்த துயரத்துக்கு ஆளானார்.
அதுவே அவருக்கான தண்டனை என பெல்ஜியம் மக்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், பெற்ற குழந்தைகளை கொன்ற தாயால் உயிரோடு இருப்பது கடினம் என்ற ஜெனிவீவ் கருணைக்கொலைக்கு விண்ணப்பித்தார். உலகில் கருணைக்கொலை நடைமுறையில் இருக்கும் நாடுகளில் பெல்ஜியமும் ஒன்று.
தாள முடியாத உடல் மற்றும் மன நோவுகளால் அவதிப்படுவோர், முழுமனதுடன் கருணைக்கொலைக்கு விண்ணப்பிக்கலாம். மரணப் படுக்கையில் அவதிப்படுவோர், முற்றிய புற்றுநோய் காரணமாக வலியால் துன்புறுவோருக்கு விடுதலை அளிக்கும் வகையில் கருணைக்கொலை அரங்கேற்றப்படுகிறது. கண்ணியமான வாழ்க்கைக்கு நிகராக கண்ணியமான சாவுக்கும் இவை துணைபுரிகின்றன.
அந்த வகையில் 16 ஆண்டுகளாக குழந்தைகளின் நினைவோடு தனிமைச் சிறையில் தண்டனை அனுபவத்த அந்த தாயின் விண்ணப்பம் ஒருவழியாக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தற்போது 56 வயதாகும் ஜெனிவீவ், குழந்தைகளைக் கொன்ற அதே நாள் அதே நேரத்தில் கருணைக்கொலைக்கு ஆளாக விருப்பம் தெரிவித்தார். அதன்படியே அவரது கோரிக்கை அதே பிப்.28 அன்று நிறைவேற்றப்பட்டது. ரகசியமாய் மேற்கொள்ளப்பட்ட கருணைக்கொலை நடைமுறையை, தற்போது ஜெனிவீவ் வழக்கறிஞர் உறுதி செய்திருக்கிறார்.