
கோவை மாவட்டம் துடியலூர் அருகே இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் இடது கை மீட்கப்பட்ட விவகாரத்தில், 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் உடலின் பாகங்கள் அங்கிருக்கும் கிணற்றில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் துடியலூரில் கடந்த 15-ம் தேதி குப்பைத் தொட்டியில் துண்டாக வெட்டப்பட்ட கை ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் துடியலூர் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். துண்டாக வெட்டப்பட்ட கையை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவரின் கை என விசாரணையில் தெரிய வந்தது. அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த பிரபு, கடந்த 14-ம் தேதி மாயமானதாக காட்டூர் காவல் நிலையத்தில் அவர் மனைவி புகார் அளித்திருந்தார். மாயமான பிரபுவின் கைரேகையும், குப்பைத் தொட்டியில் கிடந்த கையில் உள்ள ரேகையும் ஒத்துப் போனதையடுத்து இறந்தவர் பிரபுதான் என்பது உறுதியானது.
இதுதொடர்பாக அமுல் திவாகர், கார்த்திக், கவிதா ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அவரின் உடலைத் துண்டு, துண்டாக வெட்டி, மூன்று இடங்களில் வீசியது தெரியவந்தது. அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றி துடியலூர் பகுதியில் உள்ள கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து துடியலூர் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். தலை, ஒரு கை, ஒரு காலை காவல்துறையினர் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தேடிவருகின்றனர்.