விராட் கோலி கண்ணில் சுண்ணாம்பு வைத்த பிசிசிஐ!

விராட் கோலி கண்ணில் சுண்ணாம்பு வைத்த பிசிசிஐ!

இந்தியாவில் ஜனவரியில் 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி வர உள்ளது. இத்தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. 2022 டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து பேசப்பட்டு வந்த டி20 கேப்டன் பதவி பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஆக, டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை ஞாபகபப்படுத்த வேண்டியது அவசியம். 2021-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக, ‘உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்’ என்று விராட் கோலி அறிவித்திருந்தார். அதே வேளையில், ‘டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு கேப்டனாகத் தொடருவேன்’ என்றும் விராட் கோலி உறுதிப்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து 2021-ல் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால், இங்கேதான் பிசிசிஐ திடீரென ஒரு டிவிஸ்ட் வைத்தது. ‘வெள்ளைப் பந்து (ஒரு நாள், டி20) கிரிக்கெட் போட்டிகளுக்கு இரண்டு கேப்டன்கள் இருக்க முடியாது. இரண்டுக்கும் ஒருவர்தான் கேப்டனாக இருக்க வேண்டும்’ என்று கூறி விராட் கோலியிடமிருந்து ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் பதவியைப் பறித்தது. அந்தப் பதவியும் ரோஹித் சர்மாவிடமே வழங்கப்பட்டது. டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி இருப்பார் என்றும் பிசிசிஐ அறிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த விராட் கோலி, தென் ஆப்பிரிக்கத் தொடருடன் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். பின்னர் டெஸ்ட் போட்டிகளுக்கும் ரோஹித் சர்மாவே கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த ஓராண்டில் இடையிடையே ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டன்கள் நியமிக்கப்பட்டு வந்தாலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 உலகக் கோப்பை வரை இதில் எந்தச் சிக்கலும் பெரிதாக எழவில்லை. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோற்ற பிறகு, டி20 கேப்டன் பதவி குறித்த விமர்சனங்கள் எழத் தொடங்கின. மேலும் இனி டி20 போட்டிகளுக்கு இளையவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும் என்ற பேச்சும் தீவிரமானது. கேப்டன் பதவிக்கு ஹர்திக் பாண்ட்யா பெயரும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இளமையான இந்திய அணியுடன் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டன், டி20 போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டன் என்பதுதான் புரிதல். ‘2021-ல் டெஸ்ட், ஒரு நாள் தொடர்களுக்கு கேப்டனாக தொடருவேன்’ என்று விராட் கோலி சொல்லியிருந்தார் அல்லவா? அன்று வெள்ளைப் பந்துக்கு ஒவ்வொரு கேப்டன் இருக்க முடியாது என்று சொல்லியிருந்த பிசிசிஐ, இப்போது டி20 போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவையும், ஒரு நாள் போட்டிக்கு ரோஹித் சர்மாவையும் கேப்டனாக நியமித்திருப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பிசிசிஐ-யின் முந்தைய வாதப்படி ஒரு நாள், டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாவே கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக ஒவ்வொரு வெள்ளைப் பந்து போட்டிகளுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது 2023 உலகக் கோப்பை வரைக்குமான ஏற்பாடா என்றும் தெரியவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் 2023 உலகக் கோப்பைத் தொடருக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என்று எண்ணிய விராட் கோலியின் கண்ணில் பிசிசிஐ சுண்ணாம்பு வைத்ததாகவே கருத வேண்டும். ஓராண்டுக்குள் பிசிசிஐயிடம் வெளிப்பட்டுள்ள இந்த முரண்பாடு ஆச்சரியத்தையே அளிக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in