தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழக பொதுப்பணித்துறைக்கு பசுமைத் தீர்ப்பாயம் திடீர் தடை

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழக பொதுப்பணித்துறைக்கு பசுமைத் தீர்ப்பாயம் திடீர் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக பொதுப்பணித்துறைக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிப்பு சங்கம் சார்பில், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 44 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசின் பொதுப்பணி துறையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி என்ற இடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்றாமல், பொதுப்பணி துறையினர் இந்த தடுப்பணையைக் கட்டி வருகின்றனர்.
கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் உரிய அனுமதி வாங்காமலும், ஆய்வும் மேற்கொள்ளாமலும் இந்த தடுப்பணையைத் துறைமுக பகுதியில் கட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், பொதுப்பணித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "இந்த தடுப்பணைக் கட்டுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் உரிய அனுமதி வாங்கி தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது" என்றும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய பசுமை மண்டல தீர்ப்பாய அமர்வு, "தடுப்பணை கட்டும் நடவடிக்கையை உடனடியாக பொதுப்பணித்துறை நிறுத்த வேண்டும் என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். அதனை இடிக்க உத்தரவிட முடியாது ஏனென்றால், அதனால் பொது மக்கள் வரிப்பணம் வீணாகும். எனவே தமிழக அரசு, கடலோர ஒழுங்கு முறை மண்டலத்தின் அனுமதி பெற வேண்டும். மேலும் இதுதொடர்பாக கடலோர ஒழுங்கு முறை மண்டலத்திற்கு மனுதாரர் தரப்பில் மனு அளித்திருந்தால் உரிய முறையில் சட்டத்திற்குட்பட்டு அதனை ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த கூடிய பொதுப்பணித்துறை அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவிடம் தடுப்பணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான அறிக்கை பெற வேண்டும்" என்றும் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in