நாய் போல குரைத்தார்; நினைத்ததை சாதித்தார்

அதிகாரத்திடம் குழைந்து மட்டுமல்ல, குரைத்தும் சாதிக்க வேண்டியிருக்கிறது
நாய் போல குரைத்தார்; நினைத்ததை சாதித்தார்

அதிகாரத்தில் இருப்பவர்களிடம் குழைந்து சென்று காரியங்களை சாதிப்போர் மத்தியில், நாய் போல குரைத்து சாதித்திருக்கிறார் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர். அவருக்கு நேர்ந்த அனுபவம் அப்படி.

மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்தி குமார் தத்தா. குடும்ப அட்டைக்கான ஆவணத்தில் தனது பெயர் தவறாக அச்சிடப்பட்டிருப்பதை சுட்டிக்காடி அவற்றை சரி செய்து தருமாறு உரிய துறைக்கு பலமுறை விண்ணப்பித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவரது பெயரை தவறுடனே அச்சிட்டு துறை அதிகாரிகள் அனுப்பி வைப்பார்கள்.

அது சதாரண பிழையல்ல. அவரை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய எழுத்துப் பிழை. அவரது பெயரின் பின்னொட்டான ’தத்தா’ என்பதை ’குத்தா’ என்றே அலட்சியமாக அனுப்பி வைத்தார்கள். ஆங்கிலத்தில் ஒரு எழுத்து மாறியதில் அவரது அமைதி பறிபோனது. காரணம் இந்தியில் ’குத்தா’ என்றால் நாய். நல்ல பெயரை கெடுத்து நாயை ஒட்ட வைத்த அதிகாரிகளை நொந்து புலம்பினார் தத்தா. தொடர்ந்து 3 முறை விண்ணப்பித்து ஒவ்வொரு முறையும் பிழை சரிசெய்யப்படாது போகவே, தத்தா வித்தியாசமான போராட்டம் ஒன்றை கையிலெடுத்தார்.

துறையின் உயரதிகாரியை சென்று வழக்கம்போல மனு கொடுத்தார். இம்முறை வாய் திறந்து ஏதும் பேசவில்லை. தன்னை நாயாகவே பாவித்து, உரிய ஏற்ற இறக்கத்துடன் குரைத்தார். நேற்று முன்தினம்(நவ.19), இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து வைரலானதில் தத்தாவின் பிரச்சினைக்கும் ஒரு முடிவு கிடைத்தது. ’குத்தா’ என்பது திருத்தப்பட்டு ’தத்தா’ பத்திரமாய் கிடைத்தது. அதிகாரத்திடம் குழைவோர் மத்தியில் குரைத்து சாதித்த தத்தாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in