'பதிலடி கொடுக்க காத்திருக்கும் வருங்கால ராணுவ வீரர்கள்’: வீரமரணமடைந்த லட்சுமணன் ஊரில் வைக்கப்பட்ட பேனர் வைரல்

புதுப்பட்டியில் வைக்கப்பட்டுள்ள பேனர்
புதுப்பட்டியில் வைக்கப்பட்டுள்ள பேனர்

தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ராணுவ வீரரான லட்சுமணனின் சொந்த ஊரில் இளைஞர்கள் வைத்துள்ள பேனரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம்‌ திருமங்கலம் அருகே தும்மக்குண்டை அடுத்த டி. புதுபட்டியைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ் - ஆண்டாள் தம்பதியினர். இவர்களுக்கு பிறந்த லட்சுமணன் - ராமர் என்ற இரட்டைச் சகோதரர்களில் பி.காம் பட்டதாரியான லட்சுமணன் கடந்த 2019-ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் உள்ள பார்கல் ராணுவ முகாமில் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நேற்று நடைபெற்ற தாக்குதலில் லட்சுமணன் உள்ளிட்ட மூன்று ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதனையடுத்து, அவரது சொந்த ஊரான புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் உறவினர்கள் உயிரிழந்த லட்சுமணனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற தயாராக உள்ளனர். மேலும், அவரது உடல் நாளை மதுரைக்கு விமான மூலமாக கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அவரது ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பேனர் ஒன்றை புதுப்பட்டியில் வைத்துள்ளனர். அதில், ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தது குறித்து கூறிவிட்டு. இறுதியாக, 'பதிலடி கொடுக்க காத்திருக்கும் வருங்கால ராணுவ வீரர்கள்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. தற்போது, இந்த பேனரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in