எல்லா சனியும் இனி வங்கி விடுமுறை: விரைவில் அமலுக்கு வருகிறது

வங்கி
வங்கி

எல்லா சனிக்கிழமைகளும் இனி வங்கி விடுமுறையில் சேர இருக்கின்றன. இந்த வகையில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இனி வங்கிகளின் சேவையை வாடிக்கையாளர்கள் நேரில் பெற முடியும்.

தினசரி வேலை நேரத்தை அதிகரிப்பதன் வாயிலாக, வாரத்தில் சனி, ஞாயிறு என 2 தினங்கள் விடுமுறை அளிக்கும் நடைமுறைக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் உடன்பட்டுள்ளன. தற்போது 2 மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கும் நடைமுறை உள்ளது. இவற்றோடு அனைத்து சனிகளும் விரைவில் விடுமுறையில் சேர இருக்கின்றன.

வாரத்தின் 5 நாட்கள் மட்டுமே வேலைநாள் என்பது, பணித்திறன் மேம்பாடு மற்றும் இதர மனிதவள பரிந்துரைகளுக்காக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் இந்த 5 வேலைநாள் திட்டத்தில் சேர்ந்து வருகின்றன. அந்த வகையில் வங்கிகளும் இனி வாரத்தின் 5 நாள் மட்டுமே திறந்திருக்கும்.

தினசரி வேலை நேரத்தில் 40 நிமிடங்களை கூடுதலாக சேர்ப்பதன் மூலம், மாதத்தின் 2 கூடுதல் சனி விடுமுறைகளை நேர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளது. பங்குச்சந்தைகள் பாணியில் வாரத்தில் 5 நாள் மட்டுமே வங்கிகளும் செயல்படும் யோசனை ஏற்கனவே ஆர்பிஐ பரிசீலித்து வந்தது. தினசரி வேலை நேரத்தை உயர்த்துவதில் சுமூக முடிவு எட்டப்பட்டதும், இனி எல்லா சனிக்கிழமைகளிலும் வங்கிகள் விடுமுறை என்ற ஏற்பாடு முழுமையாக நடைமுறைக்கு வரும்.

அதிகரித்துள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஏடிஎம்களின் எண்ணிக்கை, ஏடிஎம் மையங்களிலேயே பணம் செலுத்தும் வசதி, மற்றும் பாஸ்புக் அச்சிடும் வசதி என வாடிக்கையாளருக்கான பரவலான வங்கிப் பணிகள், சுயசேவையாக சேர்ந்திருப்பதும் வங்கிகளின் புதிய விடுமுறை ஏற்பாட்டுக்கு உதவ இருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in