வங்கி மேலாளர் மரணத்திற்கு மாநகராட்சி காரணமா?- சென்னை மேயர் பிரியா விளக்கம்!

வங்கி மேலாளர் மரணத்திற்கு மாநகராட்சி காரணமா?- சென்னை மேயர் பிரியா விளக்கம்!

``வங்கி மேலாளர் மீது மரம் விழுந்த விபத்திற்கும் மாநகராட்சி பணிகளுக்கும் தொடர்பில்லை. மரம் விழுந்தது இயற்கையாக நடைபெற்ற சம்பவம்'' எனச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை, போரூர், மங்கலம் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் வாணி (57). இவர், கே.கே. நகரில் உள்ள இந்தியன் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து அவரது தங்கை எழிலரசியுடன் காரில் வீட்டிற்கு சென்றுள்ளார். பி.டி.ராஜன் சாலைக்கு பக்கத்தில் இருக்கும் தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்திலிருந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து வாணி வந்த காரின் மீது விழுந்ததில், கார் சுக்குநூறாக நொறுங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். கார் மீது மரம் விழுந்ததில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக வாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் கார் டிரைவர் கார்த்திக் மற்றும் வாணியின் தங்கை எழிலரசி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மாநகராட்சி தோண்டி வைத்த பள்ளத்தால்தான் மரம் விழுந்தது என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர்.

கே.கே. நகர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், மழை நீர் வடிகால் பணிகளுக்காகப் பள்ளம் தோண்டப்பட்டதாகவும், அதனால்தான் பிடிமானம் இல்லாமல் மரம் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தியது என்றும் தெரியவந்தது. இது குறித்து சென்னை மாநகராட்சிமேயர் பிரியா கூறுகையில், “விபத்து நிகழ்ந்த பகுதிக்கு 10 அடிக்கு முன்பாகவே பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து நான்கு நாட்களாகச் சென்னையில் பெய்து வரும் மழையால் மண்ணின் ஈரத்தன்மையாலும், பழமையான மரம் என்பதாலும்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. மரம் விழுந்தது இயற்கையானது. சம்பவ இடத்தில் இரண்டு நாள்களாக மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறவில்லை’’ என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in