போலி ஆவணம் தயார் செய்து 44 பேருக்கு வங்கிக் கடன்: ஊட்டியில் பதுங்கியிருந்த மோசடி மன்னன் சிக்கினார்

மோசடி மன்னன் மார்ட்டின் சாக்கோ
மோசடி மன்னன் மார்ட்டின் சாக்கோ போலி ஆவணம் தயார் செய்து 44 பேருக்கு வங்கிக் கடன்: ஊட்டியில் பதுங்கியிருந்த மோசடி மன்னன் சிக்கினார்

44 பேர் பணிபுரிவது போல் போலி ஆவணம் தயார் செய்து 1.28 கோடி கடன் பெற்று மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை வேலாண்டிபாளையத்தில் பொதுத்துறை வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் எக்ஸ்பிரஸ் கிரடிட் லோன் என்ற திட்டத்தில் சம்பள கணக்கு உள்ளவர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோவையை சேர்ந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் 2019-20 வரை தலைமை மேலாளராக இருந்த மார்ட்டின் சாக்கோ மற்றும் அவருடன் பணி புரிந்த விஜயகுமார் ஆகியோர் இணைந்து அந்த செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியாத நபர்களுக்கு, அந்த நிறுவனத்தில் பணி புரிவது போன்றும், மாத சம்பளம் பெறுவது போன்றும் போலியாக ஆவணம் தயாரித்து அதை வங்கியில் அளித்து கடன் பெற்றுள்ளனர்.

இதன்படி அவர்கள் 44 பேருக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிவது போன்று போலி ஆவணம் தயார் செய்து 1 கோடியே 28 லட்சம் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது வங்கியின் தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. இதையடுத்து மண்டல மேலாளர் செந்தில்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வங்கி மேலாளர் தண்டபாணி, ஜெய பிரகாஷ் நாராயணன், உதவி மேலாளர் ராதிகா, தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் தலைமை மேலாளராக பணிபுரிந்த மார்ட்டின் சாக்கோ, விஜயகுமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் ராதிகா, விஜயகுமார் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தனியார் செக்யூரிட்டி நிறுவன தலைமை மேலாளர் மார்ட்டின் சாக்கோ தலைமறைவானார். இதனை தொடர்ந்து, ஊட்டியில் பதுங்கி இருந்த மார்ட்டின் சாக்கோவை இன்று காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in