கடனைக்கேட்டு மிரட்டிய வங்கி ஊழியர்கள்; விஷம் குடித்து 2 பெண்கள் தற்கொலை: இருவர் கவலைக்கிடம்

கடனைக்கேட்டு  மிரட்டிய வங்கி ஊழியர்கள்;  விஷம் குடித்து  2 பெண்கள்  தற்கொலை:  இருவர் கவலைக்கிடம்

வங்கி ஊழியர்கள் கடனைக் கேட்டு மிரட்டியதால் பொறியாளர் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் எலி மருந்தை குடித்தனர். இதில் இண்டு பெண்கள் பலியாயினர். இருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை செங்கேணி அம்மன் கோயில் தெருவில் வசித்தவர் ராம்குமார்(35). இவர் தாயார் மீனாட்சி(55), சகோதரி சந்தானம்மாரி(40), சகோதரி மகள் மோகனப்பிரியா(20) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

சின்ன நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ராம்குமார் லேப் எக்யூமென்ட் சர்வீஸ் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். ராம்குமாரின் அக்கா மகள் மோகனப்பிரியா மனவளர்ச்சி குன்றியவர் எனக் கூறப்படுகிறது.

கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம்குமார்.
கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம்குமார்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 11:30 மணியளவில் ராம்குமார் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ஓடிச் சென்று பார்த்துள்ளார். அப்போது நான்கு பேரும் வாயில் நுரைத் தள்ளிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக நீலாங்கரை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து நீலாங்கரை காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன், 108 ஆம்புலன்ஸையும் வரவழைத்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களைப் பரிசோதித்ததில் சந்தானமாரி மற்றும் மோகனப்பிரியா ஆகிய இருவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. ராம்குமார், அவரது தாய் மீனாட்சி ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து உயிரிழந்த இருவரின் உடல்களைக் கைப்பற்றிய போலீஸார், உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்த மோகனப்பிரியா
தற்கொலை செய்த மோகனப்பிரியா

மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ராம்குமார் தனியார் வங்கிகளில் அதிகம் கடன் பெற்றுள்ளதாகவும், அதைத் திருப்பி அடைக்காததால் தொடர்ந்து வங்கியில் இருந்து ஊழியர்கள் அவரை செல்போனில் தொடர்புகொண்டு கடனை திருப்பி கேட்டு வந்ததும் தெரிய வந்தது. கடன் தொல்லை மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக 4 பேர் எலி மருந்து சாப்பிட்டனர் என்பது தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராம்குமாரிடம் விசாரணை நடத்திய பின்னரே தற்கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in