சேலம் வர பணமில்லை; பிணவறையிலிருந்த மனைவியின் உடல்: 10 மாதத்துக்கு பின் வந்த வங்கதேச கணவர் கண்ணீர்

சேலம் வர பணமில்லை; பிணவறையிலிருந்த மனைவியின் உடல்: 10 மாதத்துக்கு பின் வந்த வங்கதேச கணவர் கண்ணீர்

சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட மனைவியின் உடலை 10 மாதங்களுக்கு பிறகு கண்ணீருடன் கணவன் இன்று பெற்றுக் கொண்டார். உடலை சேலத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் சங்கர் நகரில் அழகு நிலையம் நடத்தி வந்த வங்கதேசத்தை சேர்ந்த தேஜ்மேண்டல் (29) என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தேஜ்மேண்டல் நடத்தி வந்த அழகு நிலையத்தில் வேலைபார்த்த வங்கதேசத்தை சேர்ந்த லப்லு, நிஷி, மும்பையை சேர்ந்த ரிஷி ஆகியோர் பணம், நகைக்காக அவரை கொலை செய்தது தெரியவந்தது. ஆனால், அவர்களை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை.

இந்நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த தேஜ்மண்டல் உடலை இந்திய தூதரகம் மூலமாக உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தேஜ்மேண்டலின் கணவர் முகமது ராக்கியை (34) தொடர்பு கொண்ட காவல்துறையினர், உடலை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் ராக்கி இந்தியா தர பணமில்லை. இதையடுத்து, காவல்துறையினர் பாஸ்போர்ட், விசா எடுக்க தேவையான பணத்தை ராக்கிக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் வந்த கணவர் ராக்கியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதோடு, மனைவி கொலை செய்யப்பட்ட இடத்தையும் காண்பித்தனர்.

பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மனைவியின் உடலை முகமது ராக்கியிடம் பத்து மாதத்துக்கு பிறகு இன்று ஒப்படைத்தனர். கண்ணீருடன் மனைவியின் உடலை கணவர் பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் சேலத்தில் உள்ள மயானத்தில் மனைவி தேஜ்மண்டலின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிழைப்புக்காக இந்தியா வந்த மனைவி படுகொலை செய்யப்பட்டு பத்து மாதங்கள் பிணவறையில் இருந்த உடலை கணவர் இன்று பெற்றுக் கொண்டது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in