போலீஸ்காரர் இடமாறுதலுக்கு எதிரான வழக்கில் 'கர்மா' அடிப்படையிலான உத்தரவுக்கு தடை

போலீஸ்காரர்  இடமாறுதலுக்கு எதிரான வழக்கில் 'கர்மா' அடிப்படையிலான உத்தரவுக்கு தடை

மதுரை காவலர் இடமாறுதலுக்கு எதிரான வழக்கில் ' கர்மா ' அடிப்படையிலான தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்தவர் ஶ்ரீ முருகன். இவர் மதுரை காவல்துறையில் முதல்நிலை காவலராக பணிபுரிகிறார். இவர் பணியின்போது முறையான அனுமதியின்றி விடுப்பு எடுத்தல், பணியில் கவனக் குறைவாக செயல்படுதல் போன்ற காரணத்தால் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக ஶ்ரீ முருகன் மதுரை மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முருகன் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, , கர்மாவின் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மனுதாரருக்கு இந்த நீதிமன்றம் நிவாரணம் வழங்க முனைகிறது. அதாவது, கர்மாவின் கொள்கைகளில் ‘சஞ்சித கர்மா’ (முழு கர்மா), ‘பிராப்த கர்மா’ (கர்மாவின் பகுதி) என்று பிரிக்கப்பட்டுள்ளது. ‘பிராப்த கர்மா’க்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.

அதன்படி மனுதாரர் பல தண்டனைகளை அனுபவித்து விட்டார். இதனால் தூத்துக்குடி இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் பிரிவுக்கு மாற்றவேண்டும். போக்குவரத்து காவல் பிரிவில் மனுதாரர் குற்றச்சாட்டு இல்லாமல் பணிபுரிய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், மகேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் அட்வகேட் வீரா கதிரவன் ஆஜராகி, காவலர் இடமாற்றம் என்பது துறை ரீதியான நடவடிக்கை. அதில் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பதவியில் இந்த இடத்திற்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து, காவலர் இடமாறுதல் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in