இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு தடை: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அதிரடி

இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு தடை: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அதிரடி

உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மவுலானா அப்துல் அலா மவுதூதியும், சையத் குதுப் ஆகிய 2 இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், எகிப்து நாட்டவர்களால் எழுதப்பட்ட இந்நூல்கள், இஸ்லாமிய நாடு அமைக்க வலியுறுத்தியிருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

உத்தர பிரதேசத்தின் அலிகர் நகரின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழகமான இதில் இஸ்லாமியக் கல்வித்துறை கடந்த 1948-ல் அமைக்கப்பட்டது. அப்போதுமுதல் இத்துறையில் உலக முஸ்லிம் நாடுகளின் அறிஞர்கள், கல்வியாளர்கள் எழுதிய பல நூல்கள் மாணவர்களுக்கு பாடங்களாகப் போதிக்கப்படுகின்றன. இவற்றில், பாகிஸ்தானின் மவுலானா அப்துல் அலா மவுதூதி மற்றும் எகிப்து நாட்டின் சையத் குதுப் ஆகியோரால் எழுதப்பட்டவையும் முக்கிய இடம் பெற்றுள்ளன.

இந்த இருவரும், புனிதக் குர்ஆனைப் புரிந்து கொள்ளுதல், இஸ்லாமிய வாழ்க்கை முறை, இஸ்லாமியர்களின் சட்டம், இஸ்லாமிய மனித உரிமைகள், இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை உள்ளிட்ட தலைப்புகளில் எழுதிய சுமார் 12 நூல்கள் உள்ளன. இவை, அலிகர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கல்வித்துறையின் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு பாடத்திட்டங்களின் அம்சமாகப் போதிக்கப்படுகின்றன. இந்த இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களும் தற்போது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தடை செய்துள்ளது.

இது குறித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கல்வித்துறையின் தலைவரான பேராசிரியர் முகம்மது இஸ்மாயில் கூறும்போது, "மவுலானா அப்துல் அலா மவுதூதி, சையத் குதுப் ஆகியோரின் நூல்களை நாங்களாகவே முடிவு செய்து தடை விதித்துள்ளோம். இவர்கள் இருவரும் தீவிரவாதத்தை போதிப்பதாகப் புகார்கள் உள்ளன. இதனால், அவர்களது நூல்களால் சர்ச்சைகள் கிளம்புவதை நாங்கள் விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தால் தடை செய்யப்பட்ட இந்நூல்களின் ஆசிரியர்கள் இருவரும் இஸ்லாமியர்களுக்கு தனி நாடு அமைக்க வலியுறுத்தி எழுதியுள்ளனர். இது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் எதிரானது. இதன் முழு விவரம் தெரிந்தும், தெரியாமலும் இந்தியாவிலும் அவை போதிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றை எழுதிய மவுலானா அப்துல் அலா மவுதூதியும், சையத் குதுப்பும் தம் சொந்த நாட்டை எதிர்த்து எழுதியவர்கள் எனக் கருதப்படுகிறது. இருவரும் தம் நாட்டின் அரசுகளால் தண்டிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறைவாசம் பெற்றவர்கள்.

பாகிஸ்தானின் அப்துல் அலா மவுதூதி, முஸ்லிம்களின் பழம்பெரும் அமைப்பான ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் நிறுவனர்களில் ஒருவர். தொடக்கக் காலங்களில் பிரிவினையை எதிர்த்தவர், பிறகு பாகிஸ்தான் தனிநாட்டிற்கு ஆதரவளித்தார். அந்நாட்டுவாசியாகி விட்ட பின் மவுதூதி, அங்கிருந்த அஹமதி பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரத்தை தூண்டியக் குற்றச்சாட்டில் 1953-ல் கைதானார். இதில் மரணதண்டனை விதிக்கப்பட்டு பிறகு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த தண்டனைக் காலத்திற்கு பின் விடுதலையானவர், மதீனா மற்றும் சவூதி அரேபியாவில் இஸ்லாமியப் பல்கலைக்கழகங்கள் நிறுவ உதவினார்.

மற்றொருவரான சையத் குதுப் தம் எகிப்து நாட்டு அதிபராக இருந்த கமால் அப்துல் நாசீர் படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதானார். பிறகு அவர் எகிப்து அரசால் 1966-ல் தூக்கிலிடப்பட்டார். இந்த இருவரின் நூல்களை பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் தடை செய்துவிட்டன. ஆனால், இந்த விவரங்கள் அறிந்தும், அறியாமலும் இருவரது நூல்கள் இன்னும் இந்தியக் கல்வி நிறுவனங்களில் போதிக்கப்படுகின்றன.

இப்பிரச்சினை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள் சமீபத்தில் எழுப்பினர். இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியிருந்தனர். வேறு சில 24 சமூக ஆர்வலர்களும் பிரதமருக்கு இந்நூல்களை தடை விதிக்கக் கோரி தனியாகக் கடிதம் எழுதினர். இதையடுத்து, இந்நூல்கள் குறித்து மத்திய பல்கலை மானியக்குழுவிடம் பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இப்பிரச்சினையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் தாரீக் மன்ஜூர் நேரடியாகத் தலையிட்டார். இதன் காரணமாக, தற்போது அலிகர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கல்வித்துறையின் கல்விக்குழுவால் ஆலோசிக்கப்பட்டு இந்த 12 நூல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த நூல்கள் மீதான போதனை டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் ஹம்தர் பல்கலைக்கழகங்கள், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தொடர்கிறது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதிலும் உள்ள மேலும் பல சிறுபான்மைக் கல்லூரிகளின் இஸ்லாமியக் கல்வி பிரிவுகளிலும் போதிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, தற்போது இப்பிரச்சினையை பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் கையில் எடுத்துள்ளது. இந்நூல்களை போதிக்கும் கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு நடவடிக்கைக்கு வலியுறுத்தத் தொடங்கி உள்ளது.

இரண்டு எழுத்தாளர்களில் தடை செய்யப்பட்ட நூல்களை, மர்கஸி மக்துவா இஸ்லாமிக் வெளியீடு, உபியின் ராம்பூரிலுள்ள மக்துவா அல் ஹத்னாத் வெளியீடு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் நூல் பதிப்பாளர்கள் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இவற்றின் விற்பனைக்கான கமிஷன் தொகையும் தொடர்ந்து அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிப்பாளர்கள் சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது. இனி இந்நுல்கள் அனைத்தும் இந்தியாவிலும் தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in