மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை: சதுரகிரி யாத்திரை செல்ல பக்தர்களுக்குத் தடை

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை: சதுரகிரி யாத்திரை செல்ல பக்தர்களுக்குத் தடை

விருதுநகர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சதுரகிரி யாத்திரையாக ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். தொடர்மழையின் காரணமாக இந்த முறை சதுரகிரி யாத்திரைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. மாதத்தில் அமாவாசை மற்றும் பெளர்ணமி காலங்களில் 5 நாள்கள் மட்டுமே பக்தர்களுக்கு இங்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதேபோல் நவராத்திரி விழாவின் போது கொலு வைத்திருப்பதால் 9 நாள்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அண்மையில் முடிந்த நவராத்திரி விழாவின்போது பக்தர்கள் வனப்பகுதியில் பெய்த கனமழையால் அனுமதிக்கப்படவில்லை. தீபாவளியையொட்டிய அமாவாசை காலத்திலும் வனத்திற்குள் நெருப்பு பற்றியதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை ஒட்டி இந்தக் கோயில் வரும் 5-ம் தேதி முதல் 9-ம் தேதிவரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும் என பக்தர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பக்தர்கள் சதுரகிரி யாத்திரை செல்லும் பாதையில் உள்ள ஓடைகளிலும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த பெளர்ணமிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என விருதுநகர் மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் முன்பு பக்தர்கள் வந்து, அங்கிருந்துதான் சதுரகிரி யாத்திரையாக காளியம்மன் கோயில், வலுக்குப்பாறை, மலட்டாறு ஓடை, சங்கிலிப்பாறை, கோணத்தல வாசல் வழியாக கோயிலுக்குச் செல்ல முடியும். வனத்துறை தாணிப்பாறை நுழைவுவாயில் முன்பு வருவதைப் பக்தர்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in