
தெலங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை வாய்த்தவர்கள் தங்களுக்கு என தனி சங்கம் அமைத்ததுடன், வழுக்கையர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.
உரிமைக்காகவும், ஒற்றுமைக்காகவும் நாட்டில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. அவற்றின் மத்தியில் விநோதமான சங்கங்களும் செயல்படுகின்றன. அவற்றில் ஒன்றாக முளைத்திருக்கிறது ’வழுக்கையர் சங்கம்’.
தலைக்குள் மூளை சிறப்பாக செயல்படுகிறதா என்று யோசிப்பதைவிட, தலைக்கு வெளியே கேசம் இருக்கிறதா என்று ஆராய்வதே சமூகத்தின் பெரும் பிரச்சினையாக நிலவுகிறது. அவ்வாறு முடி இல்லாதார்கள் குறித்து முன்முடிவுடன் அணுகுவோர் மற்றும் கிண்டல் செய்வோரால் முடியற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மத்திம வயதில் முடியிழந்து வழுக்கை எட்டிப் பார்ப்பது அந்த வயதுக்கான அடையாளமாக நிலவுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக முடியிழப்பது, அரசர்கள் முடியிழப்பதற்கு இணையாக கவலைப்பட வேண்டியதாகிறது. இந்த தலையாய பிரச்சினை குறித்த யோசனையில் இருக்கும் ஓரிரு முடிகளை பிய்த்துக்கொள்வோரும் அதிகம்.
அப்படி இளம் வயதிலேயே தலையில் முடியிழந்தவர்கள் தெலங்கானாவில் ஒன்று கூடியிருக்கிறார்கள். அனைத்தையும் சாதிக்கும் சமூக ஊடகம் அவர்களையும் ஒன்றிணைத்தது. தங்கள் கலந்தாலோசனையின் முடிவாக தற்போது அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அதன்படி, வழுக்கையர்களுக்கு என தனியாக அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பொருளாதாரத்தில் நலிவடைத்தோர், மாற்றுத்திறனாளிகள், வருமானம் இழந்தோர் மற்றும் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதன் வரிசையில் வழுக்கை தலையர்களுக்கும் ஓய்வூதியம் கோரியிருக்கிறார்கள்.
மாதம் தோறும் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், அல்லாது போனால் வழுக்கையர்கள் திரளாக கூடி அரசுக்கு எதிரான பல கட்ட போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இளம் வயதிலேயே தலை வழுக்கையானதால் சமூகத்தில் எழும் கேலி கிண்டல் தொடர்பான மனவேதனையை ஆற்றவும், முடி வளர வைப்பதற்கான முயற்சிகளுக்கும் இந்த ஓய்வூதியம் உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.