உதய்பூரில் பஜ்ரங் தள் மாவட்ட முன்னாள் நிர்வாகி மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரைச் சேர்ந்தவர் ராஜு ராஜேந்திர பர்மர்(38). இவர் பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவராவார். நேற்று இரவு அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்குச் சென்றுள்ளார். அப்போது வழியில் அவரை துப்பாக்கியால் இருவர் சுட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவம் நடந்த அருகில் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அங்கு கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கரில் இருந்து பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்ததால் பர்மர் துப்பாக்கியால் சுடப்பட்ட சத்தம் வெளியே கேட்கவில்லை. இந்த நிலையில் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பர்மரை அப்பகுதி வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்த போது, பர்மரின் மிக அருகில் இருந்து அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டு விட்டு இருவர் தப்பியோடியது பதிவாகியிருந்தது.
முதற்கட்ட விசாரணையில் சொத்துப் பிரச்சினைக்காக இந்த கொலை நடந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த கொலையின் பின்னணியில் உதய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடியான திலீப் நாத் உள்ளார் என்றும், அவர் தான் கூலிப்படையை ஏவி இந்த கொலை செய்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
கலிவாஸ் கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக திலீப் நாத்துடன் பர்மர் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் தீலிப் நாத் மத்திய சிறையில் ஒரு வழக்கில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து உதய்பூர் காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சர்மா கூறுகையில், " பர்மர் கொலைக்குக் காரணம் சொத்து பிரச்சினை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்த வகுப்புவாத பிரச்சினையும் இல்லை" என்றார். உதய்பூரில் பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் மாவட்ட நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.