மதுரையில் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளிடம் அத்துமீறல்: 7 இளைஞர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்பு

மதுரையில் மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வழக்கில் 7 மாணவர்களின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை சொக்கிகுளத்தில் உள்ள தனியார் கல்லூரிக்குள் சில நாள்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் கல்லூரி காவலரைத் தாக்கி விட்டு, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். சாலையில் நடந்து சென்றவர்களிடமும் தகாத முறையில் நடந்ததுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர். 

இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சூர்யா, முத்துநவேஷ், அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டியன், மணிகண்டன், முத்துவிக்னேஷ், வில்லியம் பிரான்சிஸ், விமல்ஜாய் பேட்ரிக், அருண் மற்றும் மைனர் சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.  இந்த வழக்கில் சூர்யா, முத்துநவேஷ், அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டியன், முத்துவிக்னேஷ், விமல்ஜாய் பேட்ரிக் ஆகியோர் ஜாமீன் கேட்டு மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  

இந்த மனுக்களை நீதிபதி வடமலை விசாரித்தார்.  மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞர் பழனிச்சாமி வாதிடுகையில், "மனுதாரர்கள் மது போதையில் சென்று கல்லூரி காவலரைத் தாக்கி, அவர் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி கொல்ல முயன்றுள்ளனர். கல்லூரி மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். பொது போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். சிலர் மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளன. இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்கும் அபாயம் உள்ளது" என்றார். இதையடுத்து 7 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in