கேரளாவை உலுக்கிய பழங்குடி மது கொலை வழக்கு: சாட்சிகளைக் கலைத்ததால் 12 பேரின் ஜாமீன் அதிரடி ரத்து

கேரளாவை உலுக்கிய பழங்குடி மது கொலை வழக்கு: சாட்சிகளைக் கலைத்ததால் 12 பேரின் ஜாமீன் அதிரடி ரத்து

கேரளத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மது கொலையோடு தொடர்புடைய 12 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வழக்கு மீண்டும் வேகமெடுத்துள்ளது.

கேரள மாநிலம், அட்டபாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடி வாலிபர் மது, பசிக்கொடுமையின் காரணமாக ஒருகடையில் இருந்து கொஞ்சமான அளவில் அரிசியை எடுத்துவந்தார். இதற்காக அவரை வனப்பகுதிக்கே தேடிவந்த ஒருகும்பல் அவரை அடித்தே கொலைசெய்தது. மது நீண்டநாள்களாக சாப்பிடாமல் இருந்ததும், பசிக்கொடுமையிலேயே அவர் அரிசியை எடுத்ததும் தொடர் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் கடந்த 2018-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடந்தது. கேரளாவை உலுக்கிய இந்தச் சம்பவம் நாட்டையே அதிரவைத்தது.

இவ்வழக்கினை கேரள மாநிலத்தில் உள்ள பட்டியலின சமூக சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடையோர் ஜாமீன் பெற்று வெளியில் இருந்தனர். இவர்கள் வெளியில் வந்த சில நாள்களிலேயே வழக்கின் சாட்சிகள் பலரும் பிறழ் சாட்சியாக மாறினார்கள். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல்செய்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் 63 முறை சாட்சிகளுக்கு, ஜாமீனில் வந்தவர்கள் அலைபேசியில் அழைத்திருக்கும் ஆவணங்களைச் சமர்பித்தனர். அதன் அடிப்படையில் நீதிமன்றம், மது கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்த 16 பேரில், சாட்சிகளைக் கலைத்து வந்த 12 பேரின் ஜாமீனை ரத்து செய்துள்ளது நீதிமன்றம். இதனால் இவர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் சூழல் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in