மெரினாவில் உளவுத்துறை துணை ஆணையரின் கை பை திருட்டு: போலீஸார் அதிர்ச்சி
ஆடி அமாவாசையை முன்னிட்டு மெரினாவில் சாமி கும்பிட வந்த உளவுத்துறை துணை ஆணையரின் கை பை திருடு போன சம்பவம் போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள மத்திய அரசு குடியிருப்பில் வசிப்பவர் ராஜீவ்நாயர்(55). இவர் மத்திய உளவுத்துறையில் (ஐ.பி) துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.
அடி அமாவாசையை முன்னிட்டு உளவுத்துறை அதிகாரி ராஜீவ்நாயர் நேற்று காலை விவேகானந்தர் இல்லம் எதிரே மெரினா கடற்கரையில் சாமிகும்பிட(தர்பணம்) செய்ய வந்துள்ளார். பின்னர் தனது அடையாள அட்டை, வங்கி ஏடிஎம் கார்டு, செல்போன், ஓட்டுநர் உரிமம், பான்கார்ட் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு மணற்பரப்பில் வைத்து விட்டு சாமி கும்பிட்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்து பார்த்த போது மணற்பரப்பில் வைத்திருந்த கை பை காணாமல் போனது கண்டு ராஜீவ்நாயர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அதிகாரி கை பையைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் உளவுத்துறை அதிகாரியின் கை பையைத் திருடு பான சம்பவம் போலீஸாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.