
மோசமான வானிலை காரணமாக, குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்த குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று தமிழகம் வந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த அவர், மகா சிவராத்திரியையொட்டி கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு சென்றார். அங்கே ஆதியோகி சிலை முன் நடக்கும் விழாவில் பங்கேற்றார். ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
அடுத்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக கோவையில் இருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டர் பறக்க இயலாது என பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்ததை அடுத்து குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.