வயிற்றுக்குள் எல்இடி பல்பு: மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்றரை வயது குழந்தை

வயிற்றுக்குள் எல்இடி பல்பு: மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்றரை வயது குழந்தை

ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று எல்இடி பல்பை விழுங்கியதால், அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளை எவ்வளவுதான் பாதுகாப்பாக வளர்த்தாலும், கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தைகள் செய்யும் குறும்புகள் வினையாய் முடிந்து விடுகிறது. சில நேரங்களில் உயிரிழப்பு வரை சென்றுவிடுகிறது. அந்த வகையில் சென்னையில் எல்இடி பல்பு ஒன்றை ஒன்றரை வயதுக் குழந்தை விழுங்கிய சம்பவம் அந்த குடும்பத்தினரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சென்னை, கிழக்குத் தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். அப்பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வரும் இவருக்கு ஒன்றரை வயதில் பூவேந்திரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. வழக்கம் போல நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிய அளவிலான எல்இடி பல்பு ஒன்றைத் தவறுதலாக விழுங்கிவிட்டது.

இதனால் குழந்தைக்கு லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பதறிய குழந்தையின் பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எல்இடி பல்பு வயிற்றில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தை தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in