அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை சமாதானக் கூட்டம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை சமாதானக் கூட்டம்: 
உயர்நீதிமன்றம் உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதானக் கூட்டம் நடத்த மதுரை கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தை ஒன்றாம் தேதி அன்று பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.  நடப்பாண்டு பொங்கல் பண்டிகை (ஜன. 15) அன்று, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. அவனியாபுரம் அம்பேத்கர் நகரில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பத்தினர் உள்ளனர். இங்கு பிற சமூகத்தவரும் வசிக்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவு படி,  அனைத்து சமூகத்தினரையும் இணைந்த குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கடந்த ஆண்டு நடந்தது. நடப்பாண்டு ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தினரையும் சேர்க்காமல் குறிப்பிட்ட சமூகத்தினர் அடங்கிய குழு மட்டும் விழா நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இக்குழுவில் ஆதிதிராவிடர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி கடந்தாண்டு விழா நடத்தியதைப்போல அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து, வரும் பொங்கல் நாளில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும் என  அவனியாபுரம் முனியசாமி, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு, மனுதாரர் தரப்பு கருத்துகளை நீதிபதிகள் கேட்டறிந்தனர். இதன் பின் நீதிபதிகள் உத்தரவில், அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து, கலெக்டர் தலைமையில் நாளை (ஜன.13) சமாதானக் கூட்டம் நடத்த வேண்டும்.

இக்கூட்டத்தில் தீர்வு எட்டினால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனை குழு உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம். அப்படி தீர்வு கிடைக்காவிடில் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குநரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும். அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்கள் இணைந்த ஜல்லிக்கட்டுக்குழு அமைந்து நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் சட்ட, ஒழுங்கு பிரச்சினை ஏதேனும் எழுந்தால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in