
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கிய மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் முதலிடம் பிடித்து வெற்றிபெற்றார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒரு நபரே 28 காளைகளை அடக்குவது இதுவே முதன்முறையாகும்.
மதுரை அவனியாபுரத்தில் இன்று காலைமுதலே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் உற்சாகமாக நடந்துவந்தன. இதில் 737 காளைகளும், மூன்ணூறுக்கும் அதிகமான மாடிபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். முன்னதாக, கோயில் காளைகள் முதலில் இறக்கிவிடப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கி மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் முதல் பரிசு பெற்றார். அவனியாபுரம் கார்த்திக் 17 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசு பெற்றார். மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பாலாஜி 14 காளைகளை அடக்கி மூன்றாம் பரிசு பெற்றார்.
ஜல்லிக்கட்டு வரலாற்றில் ஒரே நபர் 28 காளைகளை அடக்குவது இதுவே முதல்முறை. முதல்பரிசு வென்ற விஜய்க்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மொத்தம் 11 சுற்றுகள் இப்போட்டி நடந்தது. சிறந்த காளைகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள் ஆகியவையும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல் பரிசு பெற்ற விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முறையாகக் காரில் ஏறி அமரப்போகிறேன், முதல்வருக்கு நன்றி”என்றார்.