அவனியாபுரம் ஜல்லிகட்டு 7 வீரர்கள்: 26 காளைகள் தகுதி நீக்கம்

அவனியாபுரம் ஜல்லிகட்டு 7 வீரர்கள்: 26 காளைகள் தகுதி நீக்கம்

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டி உள்ளது. வாடிவாசல் திறக்கப்பட்டு காலைமுதலே காளைகளை காளையர்கள் அடக்கி பரிசுகளைக் குவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு விளையாட வந்த வீரர்களில் இதுவரை ஏழுபேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கியது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, எம்.பி வெங்கடேசன் ஆகியோர் போட்டிகளைத் தொடங்கிவைத்தனர். இதில் வாடிவாசல் தாண்டி காளைகள் சீறிப்பாயத் தொடங்கியுள்ளன. முதலில் கோயில் காளைகளும், அதன்பின்பு வளர்ப்புக் காளைகளும் சீறிப்பாய்ந்தன. ஆயிரத்திற்கும் அதிகமான காளைகள் பங்கேற்கும் இந்தப் போட்டியைக் காண தமிழகம் மட்டுமல்லாது, வெளிமாநிலங்கள், வெளிநாட்டில் இருந்தும் மக்கள் வந்துள்ளனர்.

வாடிவாசல் தாண்டி வந்த காளைகளை பிடிக்க முயன்றபோது மாடு குத்தியும், மோதியும் இதுவரை பத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் இருவர் உயர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கால்நடைத்துறையினர் மாடுகளையும், சுகாதாரத்துறையினர் போட்டியாளர்களையும் பரிசோதனை செய்து உரிய தகுதி இருப்போர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மாடிபிடி வீரர்களில் 7 பேர் அனுமதிக்கப்படவில்லை. அதில் நான்குபேர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. மூன்றுபேர் உரிய உடல் தகுதி பெறவில்லை. இதேபோல் ஜல்லிக்கட்டில் மோதும் அளவுக்கு உடல் தகுதி இல்லாத 26 காளைகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in