தாய்ப்பாலூட்டல்: தாய் - சேய்க்கு நலம் பயக்கும் அமுதூட்டல்!

அவள் நம்பிக்கைகள் -53
தாய்ப்பாலூட்டல்: தாய் - சேய்க்கு நலம் பயக்கும் அமுதூட்டல்!

தாய்மை ஒரு வரம் என்றால்.. தாய்ப்பால் என்பதை வரப்பிரசாதம் எனலாம்.  

குழந்தை பிறந்தவுடன் நிகழும் முதல் அற்புதம், முதல் அழுகையின் மூலம் காற்றை உள்ளிழுத்து, அதுவரை சுருங்கியிருந்த தனது நுரையீரல்களை விரித்து உயிர் பெறுவது!  

அடுத்து நிகழும் அற்புதம், தனக்கான உணவைத் தேடி தாயின் மார்பில் பால் அருந்தும் பிறந்த குழந்தையின் தன்னுணர்வு. இந்த நிகழ்வு மிக இயல்பான ஒன்றாக நமக்குத் தோன்றலாம். ஆனபோதும், தாய்ப்பாலூட்டல் எனும் அற்புத நிகழ்வில் மூளை தன்னிச்சையாக ஆற்றும் முக்கியமான சில செயல்வினைகளும் (reflexes) அடங்கியுள்ளன. 

அமுதூட்டலின் பின்னிருக்கும் அற்புதங்கள்

Birth reflexes என அழைக்கப்படும் இந்த அனிச்சை செயல்களில், ஒரு பிறந்த குழந்தை தானாக பால் அருந்த முனைவது, குழந்தையின் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாகவும் சரியான அளவில் முதிர்ந்து இருப்பதையும் நமக்கு அறிவிக்கிறது. மேலும், பிறந்த குழந்தை தனக்கான உணவைத் தேடி, தன்னிறைவு அடையவும் வழிவகுக்கிறது.

இந்த பர்த் ரிப்லெக்ஸ்களுள் Rooting reflex என்பது முதலாவது மற்றும் முக்கியமானது ஆகும். இத்தனை காலமாக தொப்புள்கொடி மூலம் உணவை எடுத்துக் கொண்டிருந்த குழந்தை இப்போது தாயின் மார்புக் காம்புகள் தனது வாய் ஓரத்தை லேசாகத் தொட்டதும், அந்த திசையைத் தேடி தனது வாயைத் திறந்து பால் உண்ணத் தயாராகும் செயல் இந்த ரிப்லெக்ஸில் சேரும்.

இந்த rooting reflex-க்கு sucking reflex மற்றும் swallowing reflex போன்ற செயல்வினைகள் துணையாக நிற்கும். தன்னிச்சையான இந்த செயல்கள் ஒவ்வொன்றும் பிறந்த குழந்தையிடத்து உண்மையில் ஓர் இயக்கம் போலத்தான் நடைபெறுகிறது. அதாவது, rooting reflex-ஆல் தனது அன்னையின் மார்புக் காம்பைத் தேடியடையும் குழந்தையின் உதடுகளுக்கு அருகே தாயின் காம்பு வந்தவுடன், தனது உதடுகளால் தானே பற்றி, பாலை உறிஞ்சுவது sucking reflex என்றும், அப்படி தாயின் மார்பிலிருந்து வரும் பாலை, புரையேறாமல் பருகுவதை swallowing reflex என்றும் மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.

பிறந்த குழந்தையின் உடலில், தான் வெளியுலகிற்கு வந்ததும் இயல்பாக ஏற்படும் இந்த மாற்றங்கள் போலவே, தாயின் உடலிலும் இதேசமயத்தில் milk ejection reflex என்ற சுரந்த பாலை வெளியேற்றும் செயலும் அனிச்சையாக நடக்கத் தொடங்குகிறது. இவ்வளவு காலமாக தொப்புள்கொடி மூலமாக உணவை அளித்துக் கொண்டிருந்த அவளது உடல் இப்போது அதை நிறுத்திவிட்டு, மார்பின் வழியாக பாலை சுரக்க ஆரம்பித்திருக்கும்.

அதாவது குழந்தை பிறந்த மறுவிநாடியே இவ்வளவு காலமும் அவள் உடலில் சுரந்துகொண்டிருந்த கர்ப்பகால ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் ப்ரொஜெஸ்டிரான்கள் குறைந்து, பால் சுரப்பிற்கான ப்ரோலாக்டின் ஹார்மோனின் உற்பத்தி அதிகரிக்கிறது. அதேசமயம் பிறந்த குழந்தை தனது மார்புக்காம்பைக் கவ்வும்போது, அவளது ஆக்சிடோசின் ஹார்மோன்கள் அதிகரித்து பாலை வெளியேற்றத் தயாராக இருக்கும், milk ejection reflex அடுத்து அரங்கேறுகிறது. தாயும் சேயும் ஈருடல் ஓருயிராய் இருப்பது என்பது இந்தத் தாய்ப்பாலூட்டலில் எவ்வளவு பொருந்துகிறது பாருங்கள்..!

தாய் - சேய்க்கு நலம் பயக்கும்

ஆனால் இந்த அற்புதமான இயற்கை நிகழ்வுக்கு மருத்துவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க காரணங்கள் வேறு உள்ளன. இதில் தாய் சேய் இருவருக்குமே நன்மைகள் உண்டு என்றுகூறும் மருத்துவர்கள் அவற்றை முறையே விளக்கவும் செய்கின்றனர்.

குழந்தை பிறந்தவுடன் முதல் மூன்று நாட்கள் தாயின் உடல் சுரக்கும் colostrum எனும் சீம்பாலை திரவத் தங்கம் என்றே குறிப்பிடுகிறார்கள். இது அளவில் குறைந்ததாக இருந்தாலும், நோயெதிர்ப்புத் திறனுக்கான இம்யூனோகுளோபின்களையும் அதிக புரதச்சத்தையும் அத்தியாவசிய கொழுப்புகளையும் கொண்டது. எனவே இதை தவிர்க்காது கொடுக்குமாறு மருத்துவர்கள் வலியுறுத்துவார்கள். குழந்தையின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு இந்தக் கொலோஸ்ட்ரம் உறுதுணையாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும். 

அடுத்து வரும் நாட்களில் சுரக்கும் தாய்ப்பாலானது அளவில் கூடுதலாக இருப்பதுடன், புரதச்சத்து, அத்தியாவசிய கொழுப்புகள் மட்டுமன்றி நீர்த்தன்மை மற்றும் க்ளூபோஸ் அளவும் கூடுதலாக, குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அளவில் காணப்படுகிறது. இந்த தாய்ப்பாலில் உள்ள தண்ணீர், வைட்டமின்கள், மலம் இளக்கி ஆகியவற்றால் குழந்தைகளுக்கு செரிமான மண்டலம் தூண்டப்படுகிறது. குடலின் நல்நுண்ணுயிரிகளும் அதிகரிக்கிறது.

வயிற்று உபாதைகள் பெருமளவு தவிர்க்கப்படுகிறது. இவற்றுடன் ஆஸ்துமா, அலர்ஜி, ஆட்டைடிஸ் மீடியா எனும் காதில் சீழ் வடிதல், நிமோனியா, வயிற்றுப்போக்கு, மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்கள் அனைத்தையும் தாய்ப்பால் தடுக்கும். மேலும் உடற்பருமன், குழந்தைப் பருவ சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், குழந்தைப் பருவப் புற்றுநோய்கள் மற்றும் மன நோய்களிலிருந்தும் தாய்ப்பால் காப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அனைத்திற்கும் மேலாக, தாய்ப்பாலூட்டலில் நிகழும் தாய் சேய் தீண்டுதல் காரணமாக, இருவருக்கும் இடையிலான வாழ்நாள் பந்தத்தையும், உளவியல் ரீதியான அரவணைப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வையும் உருவாக்குகின்றன.

குழந்தைக்கு இவ்வளவு நன்மைகளைத் தரும் தாய்ப்பால், தாய்க்கும் சிலபல நன்மைகளை சேர்த்தே வழங்குகிறது. முதலாவதாக, பேறுகாலத்துக்குப் பின் தாய்க்கு ஏற்படும் இரத்தப்போக்கு மற்றும் இரத்த சோகையை குறைக்க இது மிகவும் உதவுகிறது. அத்துடன் தாய்ப்பால் சுரப்பின்போது உடலில் கலோரிகள் எரிக்கப்படுவதால், தாயின் உடல் பழையநிலைக்குத் திரும்பவும் உதவுகிறது. மேலும் தாயின் அடுத்த கர்ப்பத்தைத் தள்ளிப்போடவும் இது உதவுகிறது(Lactational amenorrhea). இன்னும் முக்கியமாக, தாய்ப்பால் தருவது மார்பு மற்றும் கருப்பை சார்ந்த புற்றுநோய்களைத் தவிர்க்கிறது என்கின்றன சில ஆய்வு முடிவுகள்.

தேவை விழிப்புணர்வு

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே, 'தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளே ஆரோக்கியமான குழந்தைகள்!' என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. மேலும் பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை, குழந்தைக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும், குழந்தை பிறந்த ஆறு மாதம் முதல் இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பாலுடன் இணை உணவுகளை சேர்த்து வழங்கவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.

’மரணமில்லா பெருவாழ்வைத் தரும் பாலினைப் பருகி உன் குழந்தை நீண்டகாலம் வாழும்..’ என்று தாய்ப்பாலைப் பருகும் குழந்தையை சுஷ்ருத சம்ஹிதை வாழ்த்துகிறது. மேலும், 'உண்ண உண்ண தெவிட்டாத அம்மை உயிரெனும் முலையில் உணர்வெனும் பால்' என நமது மகாகவி பாரதியார் தாய்ப்பாலின் சிறப்பைப் பாடுகிறார்.

ஆனபோதும், இந்த ஈடு இணையற்ற தாய்ப்பாலை அனைவரும் ஏற்பதில்லை என்பதே வேதனையான உண்மை. குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் தருபவர்களின் எண்ணிக்கை வெறும் 48.5% மட்டுமே. இதில், இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் தருபவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாக.. 20% மட்டுமே இருப்பதாக அண்மை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்தில் 4 தாய்மார்கள், தாய்ப்பால் புகட்டலை முழுமையாக ஏற்பதில்லை என்பதும் இந்த வேதனையான உண்மைகளில் சேரும். வெகு எளிதாக, வெகு விரைவாக புட்டிப்பாலுக்கு மாறுவதால் மட்டுமே, வருடத்திற்கு எட்டு லட்சம் குழந்தைகள் உலகளவில் உயிரிழக்கின்றன. தாய்ப்பாலை முறையாகத் தருவதன் மூலம், பால் பவுடருக்காக ஆண்டுதோறும் செலவாகும் சுமார் 341 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலகால் சேமிக்க முடியும் என்கிறது மற்றொரு புள்ளிவிவரம். 

இப்படி, தாய்க்கும் சேய்க்கும் மட்டுமன்றி, சமுதாயத்திற்கும் சேர்த்தே, பல நன்மைகளைத் தரும் தாய்ப்பாலுக்கான விழிப்புணர்வு நம் ஒவ்வொருவரிடையேயும் நிச்சயம் மலர வேண்டும்.

'தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை, அதைத் தருவது தாயின் கடமை; அதற்கு உதவுவது இந்த சமுதாயத்தின் கடமை' என்ற புரிதலுடன்.. 'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது..!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in