அவள் நம்பிக்கைகள் - 52: பிரசவத்தை தொடரும் ஐயங்கள்!

அவள் நம்பிக்கைகள் - 52:
பிரசவத்தை தொடரும் ஐயங்கள்!

ஒன்பது மாதம் தவமாய் சுமந்த குழந்தை பிறந்தாகிவிட்டது. உடலிலும் மனதிலும் சுமந்த பெரும் பாரம் இறங்கியாகிவிட்டது. பிறந்த குழந்தையை எல்லோரும் சீராட்டி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். தாய்க்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அந்த மகிழ்ச்சி பூரணமானதுதானா?

பிரசவமான குழந்தையை தொடர்ந்து அடுக்கடுக்காக பிறக்கும் ஐயங்கள், கேள்விகள் எத்தனையோ. அவற்றுக்கெல்லாம் விடை காணபதும் அவசியம் அல்லவா?

கேள்விகள் நூறு

குழந்தை பிறக்கும்வரை குழந்தைப் பிறப்பு மட்டுமே கவலையாக இருந்த தாயின் மனதில், இப்போது புதிதாக ஆயிரம் கவலைகளும், கேள்விகளும் எழ ஆரம்பித்திருக்கும். அதிலும் சிசேரியன் மூலம் பிரசவித்தப் பெண்ணுக்கு கூடுதல் கேள்விகள் காத்திருக்கும்.

குழந்தைக்கு தாய்ப்பால் எப்போது கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்? தாய்ப்பால் நன்றாக சுரக்குமா? எப்போது உணவை உட்கொள்ளலாம்? எந்த வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.?

உணவில் கட்டுப்பாடு எதுவும் இருக்கிறதா? பழம் மற்றும் கீரை வகைகளை உண்ணலாமா?  அசைவம் எதுவும் சாப்பிடலாமா.?

எந்த உணவு சாப்பிட்டால் தாய்ப்பால் கூடி குழந்தைக்கு நல்லதாய் இருக்கும்? பிரசவித்ததிலிருந்து எப்போது நீர் அருந்த தொடங்கலாம்? எவ்வளவு அருந்தலாம்?

உதிரப்போக்கு எவ்வளவு நாட்களுக்கு இருக்கும்? 

எப்போது நடக்கலாம்? எப்போது குளிக்கலாம்? எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பார்களே.. அது எப்போது?

தாயின் அன்புக்கும் அரவணைப்புக்கும் காத்திருக்கும் மூத்த குழந்தையைத் தூக்கலாமா.?

தையல் எப்போது ஆறும்?

மாடிப்படி ஏறலாமா? குத்துக்காலிட்டு உட்காரலாமா?

பெல்ட் அணிய வேண்டுமா?

பயணம் மேற்கொள்ளலாமா?

இப்படி, எண்ணற்ற கேள்விகளுடன் காத்திருக்கும் தாய்க்கு அவசியமான பதில்களை பார்ப்போம் வாருங்கள்..

அன்றே.. அப்பொழுதே.. அமுதம்!

பிறந்த குழந்தையை கையில் வாங்கியவுடன் ஒரு தாய்க்கு எழும் முதல் கேள்வியே, "குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் தரவேண்டும்?" என்பதுதான். உண்மையில், பிறந்தவுடனேயே குழந்தைக்குத் தாய்ப்பால் அளிப்பது நல்லது. இயற்கை வழியோ, அறுவை சிகிச்சையோ.. பிரசவம் எதுவானாலும், குழந்தை பிறந்த முதல் மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அளிப்பது அவசியம். இதன் காரணமாகவே பிரசவ அறை மற்றும் அறுவை அரங்கிலேயே தாய்ப்பாலை அளிப்பது இன்று பல மருத்துவமனைகளில் வழக்கமாகவே உள்ளது.

ஆனால், "தாய்ப்பால் எனக்கு நன்றாக சுரக்குமா?" என்ற புதுக்குழப்பம் வேறு வருகிறதே. அந்தக் குழப்பமே வேண்டாம். பிரசவித்த ஒவ்வொரு தாய்க்கும் நிச்சயம் தாய்ப்பால் சுரக்கும்.

பிரசவமானதுடன் அதிகரிக்கும் தாயின் ப்ரோலாக்டின் சுரப்பு மார்பகங்களைச் சுரக்கச் செய்கிறது என்றால், குழந்தை பருகத் தொடங்கியதும் தாயின் ஆக்சிடோசின் ஹார்மோன் சுரப்பால் நிகழும் 'Milk let down reflex' எனும் வினையின் காரணமாக பால் வெளிவரத் தொடங்குகிறது. பெரும்பாலும் எல்லாத் தாய்மார்களுக்கும், தேவைக்கும் அதிகமாகவே நிச்சயம் தாய்ப்பால் சுரக்கும் என்பதே உண்மை. உண்மையில், தாய் முழு நம்பிக்கையுடன் அமுதம் புகட்டுவதும், குழந்தை அதைப் பருக முற்படுவதுமே போதும்.. மற்றதெல்லாம் தானாக நடக்க ஆரம்பித்துவிடும்.

தாய் உணவில் பத்தியம் தேவையா?

சரி, தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறோம். ஆனால், ”நான் முதலில் எப்போது உணவு உண்ணலாம்.? தொடர்ந்து எந்த வகையான உணவுகள் நான் உட்கொள்ள வேண்டும்.? அசைவம் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும் என்கிறார்களே அது உண்மைதானா.? இல்லை அதில் எதுவும் கட்டுப்பாடு இருக்கிறதா.? நான் சாப்பிடும் உணவுகள் குழந்தையை பாதிக்குமா.?” என்றெல்லாம் அடுத்து தான் உண்ணும் உணவுகள் குறித்து தாய்க்கு ஐயப்பாடுகள் கிளம்ப ஆரம்பித்து விடும்.   

பொதுவாக, நார்மல் டெலிவரி என்றால் உடனடியாகவும், சிசேரியன் என்றால் 12 முதல் 18 மணி நேரத்திற்குள்ளும் உணவை உட்கொள்ள ஆரம்பித்துவிடலாம். எனினும், எளிதாக செரிமானமாகும் உணவு வகைகளை எடுத்துக்கொள்வதே நல்லது. அதே வேளையில் பத்திய சாப்பாடு எனப்படும் உணவுக் கட்டுப்பாடு இங்கு அநாவசியம். உண்மையில் தாய் உட்கொள்ளும் எந்தவொரு உணவும் அப்படியே குழந்தைக்கான தாய்ப்பாலாக சுரப்பதில்லை. அதன் சத்துகள் மட்டுமே சென்றடைகிறது என்பதால், தான் உண்ணும் உணவுகள் குறித்த கவலைகள் எதுவும் தாய்க்கு வேண்டியதில்லை.

அதேபோல, பால் கூடுவதற்கென பிரத்தியேக உணவு வகைகள்(கருவாடு, பூண்டு) எதுவும் அவசியமில்லை என்பதையும் தாய்மார்கள் நினைவில்கொள்ள வேண்டும். அனைத்து வகையான உணவையும், குறிப்பாக புரதச்சத்து கூடிய மீன், முட்டை, மாமிச உணவு வகைகள், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பயறு வகைகள், பழங்கள், கீரைகள் மற்றும் பால், என ஆரோக்கியமான, சுகாதாரமாக சமைக்கப்பட்ட எந்த உணவையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப உட்கொள்ளலாம். மேலும், மற்ற எப்போதும் போலவே பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மற்றும் எண்ணெய் அல்லது மசாலா கூடிய உணவு வகைகளை தவிர்ப்பதுதான் இப்போதும், எப்போதும் நல்லது. 

நீர் எனும் அருமருந்து

அத்துடன் சிசேரியன் மேற்கொண்ட தாய்மார்களுக்கு தையலில் சீழ் கோர்த்துக் கொள்ளும், கால்களில் வீக்கம் ஏற்படும் எனும் காரணங்களைக் கூறி, தாய்மார்களைத் தண்ணீர் பருகவிடாமல் செய்வதை இங்கே அடிக்கடி பார்க்கமுடியும். ஆனால், உண்மையில் தண்ணீரைக் காட்டிலும் சிறந்ததொரு மருந்து இல்லை. கர்ப்பகாலத்தில் கருப்பையின் அழுத்தம் காரணமாக சற்றே வலுவிழந்த சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் மீண்டும் முந்தைய நிலைக்குத் திரும்புவதற்கு பெரிதும் துணைநிற்பது நீரும், நார்ச்சத்து நிறைந்த உணவும்தான் என்பது தாயும், அவருடன் இருப்பவர்களும் உணர வேண்டும்.

ஒருநாளில் மூன்று லிட்டர் அல்லது எட்டு க்ளாஸ் தண்ணீர் அவசியம் என்பதுடன், குறைந்த இடைவெளிகளில் அதிகம் பருகப்படும் நீர் மற்றும் திரவ உணவுகள் பிரசவித்த பெண்ணின் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. அதேபோல கால்களில் தென்படும் வீக்கம் என்பது, பிரசவத்திற்குப் பிறகு இயல்பாக நேரிடும் ஒன்றுதான். கர்ப்பகாலத்தில் உடலில் தங்கிய நீர், பேறுகாலத்தில் வெளியேறுவதன் அறிகுறிதான் இந்த கால் வீக்கம். இது பொதுவாக பிரசவமான ஓரிரு வாரங்களில் முற்றிலும் குறைந்துவிடும் என்பதால் இதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. இதற்கும், குடிக்கும் நீருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது.

உதிரப்போக்கும்.. வலியும்..!

உணவு, நீர் குறித்த ஐயங்களில் திருப்தியடைந்த அந்த பிரசவித்த தாயின் அடுத்த கவலையே "எவ்வளவு நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும்..? வலி மருந்துகள் பாதுகாப்பானவையா..?” என்பதாகத்தான் இருக்கும். பொதுவாக கருத்தரித்த நாளில் இருந்து, குழந்தை வளர வளர ஒன்பது மாதங்களாக விரிந்து கொண்டிருந்த கருப்பை, குழந்தை பிறந்தவுடன் இப்போது சடாரென்று சுருங்கத் தொடங்குகிறது. என்றாலும், அதன் முந்தைய நிலையை அது எட்டுவதற்கு அதற்குக் குறைந்தது 6-8 வாரங்கள் வரை ஆகும்.

இந்தக் காலகட்டத்தில் உதிரப்போக்கும் இயல்பாக காணப்படும். ஆனால் பிரசவித்த ஓரிரு வாரங்களில் அடர்த்தியான இரத்த நிறம் மாறி lochia என அழைக்கப்படும் மஞ்சள் அல்லது வெள்ளை நிறக் கசிவாக காணப்படும். அப்படியில்லாது, இந்த இரத்தப்போக்கு அதிகளவிலோ அல்லது வலி மற்றும் வாடையுடன் கூடிய கசிவாகவோ இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். 

பொதுவாக பிரசவித்த பின்னர் கருப்பை சுருங்கும்போதும், தாய்ப்பால் அளிக்கும்போதும், அதிக வலியைத் தாய்மார்கள் உணரலாம் என்பதுடன், குழந்தை தாய்ப்பால் பருகும்போது சுரக்கும் ஆக்சிடோசின்கள் கருப்பையையும் சுருங்கச் செய்வதால் வலி அப்போதும் உணரப்படலாம். நார்மல் டெலிவரியில் போடப்படும் தையல் ஓரிரு வாரங்கள் வரை வலி இருக்கக்கூடும் என்றால், சிசேரியன் சிகிச்சை காரணமாக ஓரிரு மாதங்கள் வரையிலும்கூட லேசான வலி இருக்கலாம். இந்த சமயத்தில் வலி நிவாரணிகள் பலனளிக்கும் என்றாலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாது அவற்றை உட்கொள்ளக் கூடாது.  

எப்போது நடக்கலாம்?.. குளிக்கலாம்?

அடுத்த ஐயமாக "பிரசவத்திற்குப் பிறகு எப்போது நடக்கலாம்?” என்று கேட்பார்கள். பெரும்பாலும் ’உடனடியாக..’ என்பதே இதற்குப் பதிலாகும். அதிலும் இயற்கையாகப் பிரசவித்த பெண், தானே எழுந்து கழிவறைக்குச் சென்ற பிறகுதான் அப்பெண்ணை பிரசவ அறையிலிருந்து, அவரது அறைக்கு செவிலியர்கள் மாற்றுவார்கள். சிசேரியன் சிகிச்சைக்குப் பின்னர், சிறுநீர்ப்பாதையில் உள்ள கெத்தீட்டர் ட்யூபை(urinary catheter) எடுத்தபிறகு, அதாவது 18-24 மணிநேரங்களுக்குள், எழுந்து நடப்பது மிகவும் அவசியம். Early ambulation எனப்படும் விரைவாக மேற்கொள்ளப்படும் நடை மற்றும் உடல் அசைவுகள், இரத்த உறைவைக் கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் இருதய மற்றும் நுரையீரல் பாதிப்புகளைத் தவிர்க்கிறது.

பிரசவமான உடன் முதலில் எழுந்து நடக்கும்போது, சமயங்களில் தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படக்கூடும். Orthostatic hypotension எனப்படும் இந்தத் தலைசுற்றல் ஓரிரு நாட்களுக்கு இயல்பானது என்பதால், துணையுடன் எழுந்து நடப்பதுதான் நல்லது. அடுத்து, கீழே குத்துக்காலிட்டு உட்காரலாமா, மாடிப்படி ஏறலாமா, இந்தியன் டாய்லெட்டை உபயோகப்படுத்தலாமா எனும் கேள்விகள் கிளம்பும். "தாராளமாக.. ஆனால், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு.!” என்பதுதான் இதற்கான பதில். பொதுவாக, இந்த படி ஏறுதல், குத்துக்காலிட்டு அமர்தல் போன்ற நிலைகள் எதுவும் தையலை பாதிக்காது என்பதுடன், வயிற்றுத் தசைகளுக்கு உண்மையில் இவை வலிமை சேர்க்கின்றன என்பதால் இவற்றை தாராளமாகச் செய்யலாம் என்று மருத்துவர்கள் பதிலளிக்கின்றனர்.

அடுத்து, தண்ணீர்பட்டால் காயத்தில் சீழ் பிடித்துவிடும் என்பதால் அறுவை சிகிச்சைக்குப் பின் குளிக்கக் கூடாது என்று பெரியவர்கள் தடுப்பதையும் நாம் பார்க்கமுடியும். ஆனால், உண்மையிலேயே ட்ரெஸ்ஸிங் பிரித்த, அதாவது இரண்டு நாட்களிலிருந்து தினமும் குளிக்கலாம். எண்ணெய் தேய்த்தும்கூட குளிக்கலாம். தண்ணீர் குடிப்பது எப்படி கழிவுகளை அகற்றுகிறதோ அதேபோல, தண்ணீரில் குளிப்பதும் அழுக்குகளைக் கழுவிடும்.

குளிப்பதற்கு உகந்தது தண்ணீரா, வெந்நீரா என்ற கேள்வியும் எழும். இதற்கான பதில், வழக்கமாய் தான் குளிக்கும் நீரையே தொடரலாம் என்பதுதான். தையலுக்கு பிரத்தியேக கவனம் எதுவும் இங்கு தேவையில்லை என்றாலும் குளித்தபின் தளர்வான உடைகளை அணிவதும், மருத்துவர் பரிந்துரைக்கும் களிம்பைத் தையலில் உபயோகப்படுத்துவதும் நல்லது. இயற்கை வழிப் பிரசவமான பெண்களுக்கு பிறப்புறுப்பு பாதையில் தையல் போடப்பட்டிருந்தால் சிட்ஸ் பாத் எனப்படும் வெந்நீர் குளியல் பலனளிக்கும்.

மூத்த குழந்தைக்கு அரவணைப்பு

அதேசமயம், சிசேரியன் தாய்மார்கள் பொதுவாக அறுவை சிகிச்சைக்குப் பின் முதல் ஆறு வாரங்கள் வரை கனமான பொருட்களை தூக்குவதைத் தவிர்ப்பது நல்லது. என்றாலும், தாயின் அரவணைப்புக்கு ஏங்கும் மூத்த குழந்தையை கவனமாகத் தூக்கி கையாளுவதும் முக்கியம்.

அதேபோல பிரசவத்திற்குப் பிறகு வயிற்றில் இறுக்கி அணியப்படும் பெல்ட் அல்லது டவல் என்பது நிச்சயம் வயிற்றைக் குறைக்காது. குறைந்தது போலக் காட்டும். அவ்வளவே. ஆனால், அதற்குப்பதிலாக பிரசவத்திற்குப் பின்னரான உடற்பயிற்சிகளை, உடல் ஒத்துழைக்கும் நாளிலிருந்து மேற்கொள்வது நிச்சயம் பயனளிக்கும். இந்த உடற்பயிற்சிகளில் 'கெகல்ஸ்' (Kegel's exercises) எனப்படும் பயிற்சி, சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்த்தாரையை வலுவாக்கும் முக்கியமான உடற்பயிற்சியாகும்.

பயணங்கள் தொடரட்டும்..

குழந்தைக்கு பாலூட்டுவதை தடை செய்யாத எந்தவொரு பயணத்தையும் தாராளமாக மேற்கொள்ளலாம் என்பதால் பிரசவத்திற்குப் பின்பான பிரயாணங்களுக்கும் தடை இல்லை.

அதுபோலவே பிரசவித்த தாய் பிறந்த வீட்டில் இருந்தாலும், பிரயாணத்தில் இருந்தாலும் மருத்துவர் கூறிய தினங்களில் மறுபரிசோதனைக்குச் செல்வது அவசியம். அத்துடன் தையல் போட்ட இடம் சிவந்திருந்தாலோ, அதில் இரத்தம் அல்லது சீழ் கசிந்தாலோ; காய்ச்சல், வயிற்று வலி அல்லது சிறுநீர்க் கடுப்பு ஏற்பட்டாலோ; அதிகப்படியான இரத்தப்போக்கு அல்லது வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டாலோ.. தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாட வேண்டும்.

பிரசவம் என்பது வலியுடன் கூடிய நிகழ்வு என்பதை மறுப்பதற்கில்லை. அது சுகப்பிரசவம் என்றாலும், சிசேரியன் பிரசவம் என்றாலும், அந்த வலி தீர்வதற்கான வழியை இயற்கையும் காலமும் இணைந்து தந்துவிடுகின்றன. ஆனால் அவற்றை மட்டுமே நம்பி அலட்சியம் காட்டாது, உணவு, உறக்கம், உடற்பயிற்சி, தக்க நேரத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்டவற்றையும் பின்பற்ற வேண்டும்.

இந்த புரிதல், உரியவர்களை முழுமையாக சென்றடையும் என்ற நம்பிக்கையுடன் 'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது.!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in